வியாழன், 3 டிசம்பர், 2009

புஷ் மீது ஷூ வீசிய நிருபர் முன்டாசர் மீது பாரீஸில் ஷூ வீச்சு (வீடியோ இணைப்பு )

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி, பாரீஸ் சென்றபோது அவர் மீது ஷூ வீசப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னை நோக்கி வந்த ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி. அவருடன் வந்திருந்த ஜெய்தியின் சகோதரர், வேகமாக எழுந்து தனது ஷூவைக் கழற்றி, ஜெய்தி மீது ஷூ வீசியவரை விரட்டினார். பின்னர் தனது ஷூவால், அந்த நபரை சரமாரியாக தாக்கினார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்ட முன்டாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்துதான் நான் புஷ் மீது ஷூ வீசினேன். ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டவே இவ்வாறு செய்தேன். எனது சக நாட்டவர் மீது நான் ஷூ வீசவில்லை. இந்த ஆக்கிரமிப்பை என்னால் தடுக்க முடியாது என எனக்கு தெரியும். அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்போது எனது டெக்னிக்கையும் அவர்கள் களவாடியுள்ளனர் என்றார் சிரித்தபடி. ஜெய்தி மீது ஷூ வீசிய ஈராக்கிய பத்திரிக்கையாளரின் பெயர் ஷெய்ப் அல் கயத் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொந்த புராணத்தைப் பாடிக் கொண்டிருந்ததால் ஜெய்தி மீது எனக்குக் கோபம் வந்தது. இதனால்தான் எனது ஷூவைக் கழற்றி வீசினேன் என்றார்.

அதன் வீடியோ காட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக