சனி, 14 நவம்பர், 2009
தனித்துவத்தை பேணவேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதென அதன் யாழ்.மாவட்ட செயலர் தெரிவிப்பு..
தமிழின விடிவுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த அடிப்படைக் கொள்கைகளில் இருந்து பின்வாங்கிவிடாத கட்சியென்ற வகையில் எமது தனித்துவத்தை பேணவேண்டிய தேவை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட செயலாளர் சூ.கே.குலநாயகம் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருசிலர் வெளியிட்டுவரும் கருத்துகளுடன் நாம் உடன்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பில் கட்சிகள் சாராதவர்களும் அப்போதைய சூழ்நிலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஒரு சிலர் தன்னிச்சையாக கூட்டமைப்பினருக்கு பகிரங்க ஆலோசனை வழங்குவதும் கருத்து முரண்பாட்டின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டும். கருத்தொருமையற்ற அல்லது குறைவான இணைப்புகள் எதுவும் தமிழன விடிவுக்கோ விமோசனத்துக்கோ உதவப் போவதில்லை. இந்நிலையில் தமிழின விடிவுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த அடிப்படைக் கொள்கைகளிலிருந்து பின்வாங்கிவிடாத கட்சியென்ற வகையில் எமது தனித்துவத்தைப் பேண வேண்டிய தேவை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பென்பது நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியதாகவோ, நாடாளுமன்றப் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் உரித்தானதோ அல்ல. தமிழரசுக்கட்சி பாரம்பரிய உட்கட்சி ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றிவரும் ஒன்றாகும். இக்கட்சிக்கு வெளியார் எவரிடமிருந்தும் ஆலோசனைகளோ, அறிவுறுத்தல்களோ வேண்டியதில்லை. தமிழரசுக்கட்சி ஆரம்பித்த காலங்களிலிருந்து அதே இலக்குகளும், நோக்கங்களும், அபிலாசைகளும், இலட்சியங்களும் இன்றும் உயிரோட்டமாகவே உள்ளன. காலத்திற்குக் காலம் இவற்றை எய்துவதற்கான போராட்ட வழிமுறைகளும் வடிவங்களும் மாறினாலும் இலட்சியங்கள் மாறுபடவோ மறையவோ இல்லை. எனவே இவற்றை நோக்கிய பயணம் தொடர வேண்டியதொன்றாகும். இவைபற்றிய தீர்மானங்களும் முடிவுகளும் அடுத்தமாதம் 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கட்சியின் 60வது பூர்த்தி மாநாட்டின்போது வெளியிடப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக