ஞாயிறு, 18 அக்டோபர், 2009

76 இளைஞர்களுடன் புலிகளின் கப்பல் கனடிய கடற்பரப்பில் (வீடியோ உள்ளே)

வன்கூவர் தீவுக்கு மேலே கனடியக் கடற்பரப்பில் கனடிய கடற்படை மற்றும் பொலிஸாரினால் படகொன்று 76 இளைஞர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. தகவல் ஒன்றின் அடிப்படையில் செயற்பட்ட கடல்கடத்தல் தொடர்பான விசேட பயிற்சி பெற்ற படையினர் இக்கப்பலினை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து அதில் இருந்தவர்களை விசேட தடுப்பு முகாமில் வைத்துள்ளதாக கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் வான் லொன் தெரிவித்துள்ளார். ஓசியன் லேடி எனும் பெயரிடப்பட்டு கனடிய கடற்பரப்பை அடைந்துள்ள இக்கப்பலிலுள்ள அனைவரும் சிறந்த உடல்நலத்துடன் காணப்படுவதாகவும், குறிப்பிட்ட கப்பல் எங்கிருந்து புறப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தோல்வியை தழுவியுள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு சர்வதேச ஆட்கடத்தலில் ஈடுபட்டுவருவகின்றமை தெளிவாகின்றது. புலிகளியக்கத்திற்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்த புலிகளின் கப்பல் கம்பனிகளின் செயற்பாட்டாளர்களே இவ் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட கப்பல் கம்பனிகளின் பெயரில் பொருத்தமான கப்பல்களை கொள்வனவு செய்யும் இவர்கள் அவற்றின் மூலம் சர்வதேச மட்டத்தில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றமை மிகவிரைவில் ஆதாரங்களுடன் நிருபனமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்குறிப்பிட்ட கப்பலினை புலிகளின் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்த இந்தோனிசியாவில் இருந்து செயற்பட்டுவரும் பிரித்தானியா பிரஜையும் புலி உறுப்பினருமான சங்கர், தாய்லாந்தில் இருந்து செயற்படும் கனடிய பிரஜாவுரிமை கொண்டுள்ள கட்ட ரவி, மணி, சீலன், சதீஸ், கருப்பை அல்லது கடாபி, ஆகியோரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சர்தேச மட்டத்தில் பல குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்கள் என்பதுடன் கடாபி என்பவர் இந்தியாவூடாக புலிகளுக்கு பல தொழில்நுட்பங்களை சட்டவிரோதமாக அனுப்ப முனைந்த குற்றத்திற்காக கியூ பிரிவு பொலிஸாரினால் தேடப்படுபவருமாவர். இந்தோனேசியாவில் இருந்து 42 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ள கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதுடன் இக்கப்பலில் ஓட்டிகளாக செயற்படுவோர் புலிகளின் கப்பல் கம்பனிகளின் கப்படன்களும், முன்னாள் கடற்புலிகளும் என நம்பப்படுகின்றது. இக்கப்பலில் வெளிநாடுகளுக்கு கொண்டுவரப்படுபவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என புலம் பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு கூறப்பட்டாலும் இது முற்றிலும் வியாபார நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்பது, கப்பலில் பயணம் செய்துள்ளவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுகின்றது. இக்கப்பல்களில் ஏற்றப்படுபவர்களின் உறவினர்களிடம் இருந்து கணிசமான அளவு முற்பணம் வாங்கப்பட்டுள்ளதுடன் பல உடன்படிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் புலிகளின் சர்வதேச மட்டத்திலான இச்செயற்பாடு நிச்சயம் தமிழ் மக்களுக்கு பாரிய சிக்கல் ஒன்றை ஏற்படுத்தும் என பலரும் அஞ்சுகின்றனர் வீடியோவிற்கு அழுத்துங்கள்

கனடா நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக