புதன், 17 செப்டம்பர், 2014

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்!!


1989 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மருத்துவ டாக்டரும், மருத்துவபீட விரிவுரையாளருமான ரஜினி திரணகம நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. வடக்குத் தமிழரான ரஜினி, தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான திரணகம என்ற சிங்களவரை மணந்திருந்தார்.

1980 களின் பிற்பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகள் மற்றும் இந்திய
அமைதிப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் புரிந்தவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகங்களை 'முறிந்த பனை' என்னும் நூல் மூலம் எழுதி வெளியிட்ட நால்வர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலை எழுதியமைக்காகவே இவர் படுகொலை செய்யப்பட்டார் என்றும் நம்பப்படுகின்றது.

'மனித உரிமைகளுக்கான பல்கலை ஆசிரியர்கள் - யாழ்ப்பாணம்' என்ற மனித உரிமைச் செயற்பாட்டகத்தின் ஸ்தாபக உறுப்பினர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் சனிக்கிழமை 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நினைவுக் கூட்டம் நடைபெறும். அன்று மாலை 2 மணிக்கு திருநெல்வேலிச் சந்தியில் இருந்து ஆரியகுளம் சந்தி வழியாக வீரசிங்கம் மண்டபம் வரை அமைதி, ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தி, ரஜினி திரணகம நினைவாக ஊர்வலம் ஒன்று இடம்பெறும். அடுத்த நாள் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு "நீதியான ஜனநாயக சமூகத்தை நோக்கி...." என்ற தலைப்பில் யாழ். பல்கலைகழகததின் கைலாசபதி அரங்கில் ஒரு கருத்தரங்கும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக