முல்லைத்தீவில் நடைபெற்றுவரும் காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பவர்களை அச்சுறுத்த வேண்டிய தேவை படையினருக்கோ அல்லது படைப் புலனாய்வினருக்கோ கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.சாட்சியமளிக்கச் செல்பவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவுசெய்து வருகிறது. இதில் சாட்சியமளிக்கச் செல்பவர்களுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்துக் கேட்டபோதே, இராணுவப் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவென்பது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதொரு ஆணைக்குழு. விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது நியமிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அதன் செயற்பாடுகளைக் குழப்ப வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லையென இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்குவார்களே தவிர, ஒருபோதும் அவற்றைக் குழப்பமாட்டார்கள்.
சாட்சியமளிக்கச் செல்பவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த விதமான உண்மையும் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக