ஞாயிறு, 6 ஜூலை, 2014

பிரதம நீதியரசருக்கு எதிராக அரசாங்கத்திற்குள் கிளம்பிய எதிர்ப்பு...!!!

சட்டக் கல்லூரிக்கான நுழைவு தேர்வை ஆங்கில மொழியில் மாத்திரமே நடத்த , பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான சட்டக்கல்வி சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசாங்கத்திற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வினாத்தாள்களை வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

அதேவேளை அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிங்களம் மற்றும் தமிழில் பதிலளிக்க ஆங்கில மொழியில் வினாத்தாள்கள் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.


சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பதிலளிக்க , அந்த மொழிகளிலேயே வினாத்தாள்களை ஏன் வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதம நீதியரசரின் இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சட்டக்கல்வி சபையின் தீர்மானத்தை நிராகரிக்க நீதியமைச்சருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரத்திற்கு பிரதம நீதியரசரால் அழுத்தம் கொடுக்க முடியாது எனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த சம்பவமானது எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் மோதலை உருவாக்குவதை தவிர்க்க முடியாது என அரசாங்கத்தின் உட் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக