வெள்ளி, 9 மே, 2014

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் இன்று ஆரம்பம்.....!!!!!

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று(9) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

-இன்று(9) இடம் பெற்ற விசாரணைகளின் போது காணாமல் போன கடத்தப்பட்வர்களின் உறவினர்கள் சார்பாக 5 சட்டத்தரணிகள் மன்றில்
ஆஜராகியிருந்தனர்.

கொழும்பில் இருந்து வருகை தந்த சட்டத்தரணிகளான ஆர்.ராஜகுலேந்திரன், ஆ.நிரஞ்சன் மற்றும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா, ரி.வினோதன், எஸ்.லோகு ஆகிய 5 சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்த போது காணாமல் போன கடத்தப்பட்ட உறவினர்களின் கோரிக்கைகளை சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

குறித்த புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த புதைகுழி தோண்டப்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் கிணறு ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த கிணறு தற்போது மூடப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் உள்ளது.

குறித்த கிணறும் தோண்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை காணாமல் போனவர்களது உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் நீதவானிடம் விண்ணப்பம் செய்தனர்.

இதன் போது இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை செய்து மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதோடு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலும் அவை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் மன்றில் அறிக்கை சமர்பிபிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டதோடு புதைகுழி தோண்டப்பட்ட போது அங்கு பிரசன்னமாகியிருந்த விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரியையும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரனையின் போது மன்னார் பொலிஸார் மற்றும் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினா மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

மீண்டும் வழக்கு விசாரணை எதிர்வரும் யூன் மாதம் 9 ஆம் திகதி (09-06-2014) விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தககது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக