
தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்குள்ளிருந்து கொண்டே குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரதிநிதித்துவத்தை இயன்றளவு கட்டுப்படுத்துவது இந்த திடீர் பொதுத்தேர்தலின் முக்கிய
நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுலவகத்தின் முக்கிய அதிகாரியொருவர் மூலம் நம்பகமான முறையில் எமது செய்தியாளரிடம் தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலையில் அரசாங்கத்தினுள் அமைசசர் பதவிகளைப் பெற்றுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் மூலமாக அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் இவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துக்கு தமது ஆதரவு தொடரும் என்பதை ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி என்பன வலியுறுத்தியுள்ளன.
மேலும் சிறுபான்மை அமைச்சர்கள் தமது இனங்களின் நலன் கருதி தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பொதுபல சேனா அமைப்பினரும் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது சிங்கள தேசிய உணர்வாளர்களின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் நிலைத்திருக்க வேண்டுமானால், சிறுபான்மை இன பிரதிநிதிகள் அடக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி உணர்ந்துள்ளார்.
அதற்கான ஒரே வழி திடீர் பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பலத்தை குறைப்பதேயாகும் என்றும் அவரது ஆலோசகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் கடந்த மே தினத்தில் அரச தரப்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பெருமளவான மக்கள் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு, தற்போது ஒரு தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம் என்றும் அரச தரப்பு முக்கியஸ்தர்கள் கருதுகின்றனர்.
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் திடீர் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக