இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்ளும் போதே வர்த்தமானி அறிவித்தல் விடப்படும் ஆனால் வடக்கில் இடம்பெறும் ஆட்சேர்ப்பானது இராணுவத்தின் ஒரு பிரிவான தொண்டர் படைக்கான ஆட்கள் சேர்ப்பாகும் இதற்கு வர்த்தமானி அறிவித்தல் இல்லை என்று யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராச்சி தெரிவித்தார்.
யாழ். சிவில் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று நிரந்தரப் படை, மற்றொன்று தொண்டர் படையாகும். தற்போது யாழில் இளைஞர் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படுவது தொண்டர் படைக்கு கீழுள்ள சிவில் பணிகளுக்காகும். இதில் தற்போது 700 தொடக்கம் 800 வரையான வெற்றிடங்கள் உள்ளன.
நிரந்தரப் படைக்கும் தொண்டர் படைக்கும் வித்தியாசம் உண்டு தொண்டர் படையில் உள்ளவர்கள் எப்போது வேணடுமானாலும் விட்டு விலகிச் செல்லலாம். ஆனால் நிரந்தரப்படையில் உள்ளவர்கள் அவ்வாறு இடையில் விட்டுச் செல்ல இயலாது. நாம் தற்போது ஆட்கள் சேர்ப்பது தொண்டர் படையணிக்காகும்.
இவ்வாறு சிவில் பிரிவுக்கு உள்வாங்கப்படுபவர்களுக்கு காங்கேசன்துறையில் 3 மாத காலம் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். ஏற்கனவே பணியில் இருந்தவர்கள் ஓய்வூதியம் பெற்றுச் சென்ற காரணத்தினால் தற்போது வெற்றிடங்கள் காணப்படுகின்ற அவ்வெற்றிடங்களுக்கே ஆடச்சேர்ப்பு இடம்பெறுகிறது என்றும் இது தொடர்பாக வெளிவந்த அநாமதேயத் துண்டுபிரசுரங்களை நாம் வெளியிடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக