புதன், 7 மே, 2014

கொழும்பில் போராட்டங்களை நடாத்தக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது...!!!!

கொழும்பில் போராட்டங்களை நடாத்தக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பின் கொம்பனித்தெரு பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடாத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொம்பனித்தெரு காவல் நிலையப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதவானினால் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்த வேண்டுமாயின் நீதிமன்றம் அதற்காக சில வழிமுறைகளை அறிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.15ம் உலக இளைஞர் மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச ரீதியிலான நிகழ்வு ஒன்று இலங்கையில் நடைபெறும் தருணத்தில் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவது நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இன்றைய தினம் போராட்டங்களை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சுகாதார சேவை மாணவர் அமைப்புக்கள் உள்ளிட்ட இன்றைய தினம் கொழும்பில் போராட்டங்களை நடாத்தத் திட்டமிட்டிருந்தன. எனினும், நீதிமன்றம் இந்த போராட்டங்களை நடாத்தக் கூடாது என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியிலும், கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை நடாத்த நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போராட்டம் ஒன்றினால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரத்மலானை தெலவல வீதி நீண்ட காலமாக செப்பணிடப்படவில்லை எனத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காலி வீதியில் பாரியளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக