திங்கள், 10 மே, 2010

பொலநறுவை சோமாவதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இருவர் பலியானதுடன் 25 பேர் படுகாயம்..!!

பொலநறுவை சோமாவதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இருவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு சூழ்ந்த பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கி பரிதவித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு படுகாயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் காயமடைந்தவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சோமாவதி விஹாரை அமைந்திருக்கும் பகுதியில் நேற்று கடும் மழை பெய்ததுடன் மத வழிபாடுகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்பில் இலங்கை விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவிக்கையில், "சோமாவதி சைத்திய பகுதியில் வெள்ளம் சூழ்கொண்டமையினால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கி பரிதவித்தனர். அதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் நால்வரை விமானப்படையினர் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து மீட்டுள்ளனர்.ஏனையவர்களை மீட்கும் பணிகளில் விமான படைக்கு சொந்தமான பெல் ரக ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பகுதியில் கடும் மழைபெய்துக்கொண்டிருப்பதனால் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் கலேவல மற்றும் வெளிமட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக