வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில்

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. சபாநாயகர் தெரிவுக்கு பின்னர் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "கடந்த முறை சபாநாயகரை இரவு சாப்பாட்டுக்குப் பின்னரே தெரிவு செய்தோம். 1989 ஆம் ஆண்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டது போல இம்முறையும் செய்தோம்.எனக்கும் புதிய சபாநாயகருக்கும் இடையில் அரசியல் ரீதியில் கருத்து மோதல்கள் இருந்த போதிலும் தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் இந்த இடத்தில் ஒரு கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. முழு நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகவே அமர்ந்திருக்கின்றார். சபாநாயகரின் பொறுப்பு என்ன என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டு நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் மூலமாகக் கட்டுப்படுத்த வேண்டும். இவற்றை பாதுகாக்கவில்லையாயின் நாடு உங்களைப் பாதுகாக்காது.அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். 1835 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசியாவிலேயே பழைய நாடாளுமன்றம் என்ற வரலாற்றை, பெருமையை எமது நாடாளுமன்றம் கொண்டிருக்கின்றது. உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர். மலையகத்திலிருந்து தெரிவான பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு பொறிமுறைகள் இருக்கவேண்டும். அதனை வசனத்தில் மட்டுப்படுத்தக் கூடாது"என்றார்.
பிரதமர் வாழ்த்து....

பிரதமர் தி.மு. ஜயரட்ன வாழ்த்து தெரிவிக்கையில், "சபாநாயகராக உங்களை தேர்ந்தெடுத்தமையை இட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களுடைய அரசியல் வாழ்க்கை சுத்தமானது என்பது மட்டுமன்றி பிரதேச மக்களின் மனங்களையும் வென்றெடுத்துள்ளீர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள தீர்மானம் முக்கியமானது. அதனையிட்டு சந்தோஷமடைகின்றேன். 30 வருடகால யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும் என்றும் நம்புகின்றேன்.அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான உரிமை எதிர்க்கட்சியிடமே இருக்கின்றது. அதனை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.ஒரே இனமாக இருந்து செயற்படவேண்டும் என்பதுடன் மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்பதனால் எங்களுக்கு எதிரான சர்வதேசத்தின் குரலை எதிர்ப்பதற்கு ஐக்கியப்படவேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக