திங்கள், 26 ஏப்ரல், 2010

இலங்கையில் அவசர நிலையை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது - புதிய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்..!

இலங்கையில் அவசர நிலையை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கரிசனைகள் வெளியிடப்பட்டு வந்துள்ள ஒரு சூழலில், அந்நாட்டில் அமலில் இருந்துவரும் அவசர நிலையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அவசரகால சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், நாட்டில அவசர நிலை தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கிவருகிறது.
மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக