திங்கள், 22 பிப்ரவரி, 2010

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைப்பு..!

முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்திருப்பதாக கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுக் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இன்றைக்குள் இறுதித் தீர்மானத்தை வெளியிடுவாரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடுபூராவும் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுமாகவிருந்தால் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தின் ஒரு மாவட்டத்திலும் போட்டியிடுவாரெனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவிருந்தால் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டியிருப்பின் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முஸ்லிம் உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஐ.தே.க.வின் தற்போதுள்ள அமைப்பாளர்களை மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமெனவும் கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக