வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கொழும்பு மாவட்ட தமிழர் அமைப்பு ஐ.ம.சு.முன்னணியை ஆதரிக்கத் தீர்மானம்..!

கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதால், கொழும்பு மாவட்டத் தமிழர் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தேசமான்ய ஏ.எஸ்.பூபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தமது அமைப்பு மஹிந்த சிந்தனையில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காகப் பாடுபட்டதாகவும் கூறிய பூபாலசிங்கம், ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்துத் தமிழர்களும் அவரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது தலையாய கடமையாகுமென்றும் கொழும்பில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார். கொழும்பு மாவட்ட தமிழர் அமைப்பின் செயலாளர் என்.விஜயன் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் வாழும் தமிழர்கள் இருப்பிடம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த சிந்தனை அடிப்படையில் செயற்படப்போவதாகக் கூறிய விஜயன், தமது அமைப்பு ஓர் அரசியல்கட்சி அல்லவெனினும், பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுவரை ஜனாதிபதியே பதவியில் இருப்பார். அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரமுள்ளது. எனவே, ஐ.ம.சுமுன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்தோம் என்று கூறிய விஜயன், தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கிலேயே கடந்த நவம்பரில் இந்த அமைப்பை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக