ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்கட்சிகள் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபாடு..!!

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்ந்தும் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றபோதும் இந்தவாரம் நடுப்பகுதியிலேயே உறுதியான நிலைப்பாடு வெளியிடப்படுமென்று தெரியவருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பிலான மாவட்ட ரீதியிலான கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் இரண்டொரு தினங்களில் தீர்மானிக்கப்படுமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.துரைரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் எவரை நியமிப்பது என்பது தொடர்பாகத் தேர்தல் நியமனக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய், புதன் கிழமைகளில் அவர்கள் கூடிஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் தேர்தல் நியமனக்குழுவில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்க(ரெலோ)த்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். தேர்தல் நியமனக்குழுவினரே பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவோர் தொடர்பாகக் கூடிஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை வெளியிடுவார்கள் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக