பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல்செய்வதற்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல்கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமானநிலை காணப்படுவதாக அரசியல்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகள் பெரும்பாலும் அரசதரப்புடன் இணைந்தே போட்டியிடலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்னமும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதேவேளை, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல்மாகாண ஆளுநர் எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக