புதன், 9 டிசம்பர், 2009

இலங்கையுடனான முரண்பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்வதில் அமெரிக்கா முனைப்பு !

ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அக்கறையை எடுத்துக்காட்டி, அந்நாட்டு செனற் வெளியுறவுக்குழு தயாரித்துள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையில் முரண்பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட இருக்கிறது. இலங்கையின் வடபகுதியில் சிறுபான்மைத் தமிழ்மக்களுக்கென தனிநாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக போராடிவந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்திய விதம் குறித்து அரசாங்கம் பரவலான விமர்சனத்திற்கு உள்ளான அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிராந்தியத்தை புனர்நிர்மாணம் செய்வதிலும் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததும் நாட்டில் புதியஅரசியல், பொருளாதார சீரமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் இலங்கையுடனான தொடர்புகளை அமெரிக்கா புதுப்பிக்க விரும்புவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. மனிதநேய அம்சங்கள் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய அதேவேளை இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கை, ஒரு விடயத்தை மட்டும் வைத்து கணிப்பிடப்படக் கூடியதல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தக் குற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையரசுடன் முரண்பாடான நிலையைக் கொண்டிருந்த அமெரிக்கா தற்போது மேற்குறித்த இணக்கப்பாடுகளைக் கொண்டிருப்பது வியக்கத்ததென தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக