ஞாயிறு, 25 ஜனவரி, 2015

முதலில் பொதுமக்களுக்கு நிவாரணம் பின்னர் மோசடிக்காரர்கள் கைது ரணில் தெரிவிப்பு..!!!

முதலில் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர் முன்னைய அரசாங்கத்தின் மோசடிக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாய, பல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்து கடந்த அரசாங்கம் பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையொன்றை ஏற்றியிருந்தது. ஆனால் அது ஒரு பாரிய தவறான பொருளாதார நடைமுறையாகும்.


அதற்குப் பதிலாக கிராமப்புறங்களின் பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களின் மூலம் வர்த்தக முயற்சிகளை அதிகரிக்கலாம். இதன் போது அரசாங்கத்துக்கான வரி வருமானம் அதிகரிக்கும். மறுபுறத்தில் நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கும். இதுதான் இன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது.

தற்போதைய நிலையில் நாட்டு மக்களின் பொருளாதாரம் கடந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக சீரழிந்துள்ளது. அதனை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

தற்போதைக்கு எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு நேரடியான நன்மைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் பல பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டு, விலைகள் குறைக்கப்படும். அதன் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும்.

அதன் பின்னரே முன்னைய அரசாங்கத்தின் மோசடிக்காரர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக