புதன், 12 நவம்பர், 2014

இந்தியாவுக்கு ஆயுத விற்பனை விவகாரம் பதிலளிக்குமாறு கோத்தபாயவுக்கு சபாநாயகர் உத்தரவு..!!

இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததா? என்ற கேள்விக்கு உடன் பதிலளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு  சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோளை இந்தக் கேள்வியை நாடாளுமன்றில் எழுப்பியிருந்தார். எனினும்,  இந்தக் கேள்விக்கு பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்திருக்கவில்லை.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் லோக்சபாவில் குறிப்பிட்டதனைப் போன்று இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதா? அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் எப்போது கொள்வனவு செய்யப்பட்டது? என்ன ரக வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது? விற்பனையின் ஊடாக கிடைக்கப் பெற்ற வருமானம்? இந்தக் கொடுக்கல் வாங்கலின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் அறிக்கை என்பனவற்றை சமர்ப்பிக்குமாறு தலதா அதுகோரளை கோரியிருந்தார்.

பிரதமர் மற்றும் பௌத்த சாசன அமைச்சரான டி.எம். ஜயரட்னவிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.


இந்தக் கேள்விக்கு பதிலளிக்க ஒரு மாத கால அவகாசம் தேவை என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

சபாநாயகர் அவர்களே!

 இந்தக் கேள்விகளை எழுப்பி பதினொரு மாதங்கள் ஆகின்றன. இன்று நான்காவது தடவையாகவும் கால அவகாசம் வழங்குமாறு கோரப்படுகின்றது. ஏன் இவ்வாறு செய்கின்றார்கள்.

இது நிர்மலமான பௌத்த நாடாகும். அதன் காரணமாகவா ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி பதிலளிக்கவில்லை?” என தலதா அதுகோரளை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்மலமான பௌத்த நாடாகும். பௌத்த மாதம் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. புத்தபிரான் பிறந்த இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தக் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக