சனி, 8 நவம்பர், 2014

கொஸ்லாந்தையில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு இறுதிக் கிரியைகள் இந்து முறைப்படி..!!

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டவர்களில் இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 20 பேர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய மாவட்ட அலுவலகம் ஆகிய தரப்புகள் இந்த எண்ணிக்கையை உறுதிசெய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 300 க்கும் அதிகமான குடும்பங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதுதவிர ஏனைய பிரதேசங்களில் மழையற்ற சீரான வானிலை நிலவுவதால் இயல்பு நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, மண்சரிவில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் 11 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச மக்களின் உதவியுடன் இன்றும் மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

ஆயினும், பிரதேசத்​தைச் சேர்ந்த ஐந்து பேர் மாத்திரமே இன்றைய மீட்பு பணிகளுக்கு உதவிபுரிந்து வருவதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி குறிப்பிட்டார்.

மண்சரிவினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுவதற்கான தொடர்பாடல் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா சுட்டிக்காட்டுகின்றார்.

மாவட்ட செயலாளர் தலைமையில், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம், மண்சரிவு ஆய்வுப் பிரிவு, சிவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள், இந்து சமய சம்பிரதாயங்களின் பிரகாரம் எதிர்வரும் சில தினங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி குறிப்பிடுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக