செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ஊர்காவற்றுறை பிரதேசத்துக்கு வடமாகாண சபை மூலம் குடிநீர் வசதி...!!!!

வடக்கில் நிலவி வரும் கடும் வரட்சி காலநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலொன்றாக தீவகப்பகுதி விளங்கி வருகிறது. இயற்கையாகவே நன்னீர் வளம் குறைந்த இப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சியும் மக்களை மிகவும் பாதித்து வருகின்றது.
இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்ற சூழ்நிலையில் அண்மையில் தம்பாட்டி பிரதேசத்துக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு, அப்பிரச்சனைகள் தற்காலிகமாகவேனும் நிவர்த்தி செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

அதற்கமைவாக இன்று 18.08.2014 திங்கட்கிழமை முதற்கட்டமாக தம்பாட்டி பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன்கருத்து வெளியிடும் போது, கடந்த சில நாட்களுக்கு முன் இப்பிரதேசத்துக்கு வந்த போது, இம்மண்டபத்தில் வைத்து இப்பிரதேசத்துக்கான தற்காலிக குடிநீர் விநியோகத்தை எமது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களின் உதவியுடன் மேற்கொள்வேன் என உறுதியளித்திருந்தேன்.

அதன்படி பத்து நாட்களுக்குள்ளாகவே எமது வடமாகாணசபை மூலம் இக்குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. இதற்கு எமது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும், இம்மக்கள் சார்பிலும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் மட்டுமன்றி ஆர்னோல்ட் மற்றும் விந்தன் ஆகியோரும் இதே கோரிக்கையை அமைச்சர் அவர்களிடம் முன்வைத்தமையை நான் அறிவேன்.

மிகவும் குறைந்த அதிகாரங்களோடும், குறைந்த வளங்களோடும், அரசியல் குழிபறிப்புகளுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் எமது வடமாகாணசபையின் மூலம் எமது தாயக மக்களுக்கு உச்சக்கட்ட சேவையை ஆற்றுவது தான் எமது அடிப்படையான நோக்கமாகும்.

அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான எம்மை மிகப்பெரிய அளவில் மக்கள் நம்பியிருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடக்க வேண்டியது எங்களுடைய மிக முக்கியமான கடமை.

அதிலும் குறிப்பாக விசேடமாக தீவகத்தின் ஊர்காவற்றுறைத் தொகுதி மக்கள் பல்வேறு நெருக்குவாரங்களையும் தாண்டி எங்கள் மீது வைத்திருக்கும் அந்த நம்பிக்கையை நாம் எப்பாடுபட்டும் காப்பாற்றுவோம் என்பதற்கான ஒரு அடையாளமாகத்தான் நான் இந்த நிகழ்ச்சியைக் கருதுகின்றேன்.

மக்கள் தமது பிரச்சனையை எம்மிடம் முறையிடுகிறார்கள். நாம் அப்பிரச்சனைகளை எம் சக்திக்குட்பட்ட முறையில் சாதகமாக அணுகி அப்பிரச்சனைகளைத்தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை மேற்கொள்வோம்.

பல்வேறு இடர்கள், பல்வேறு நெருக்குவாரங்கள், பல்வேறு மிரட்டல்களின் மத்தியிலும் கூட பலவிதங்களிலும் பாதிக்கப்பட்ட எம்மக்கள் தமிழ்த்தேசிய சிந்தனையுடன் இப்பிரதேசத்தில் வாழ்கிறார்கள். ஏனைய பிரதேசங்களை விடவும் இப்பிரதேசத்தில் இவ்வாறான தமிழ்த் தேசியப் பற்றுடன் வாழ்வதன் கஷ்டங்களை மிக அறிந்தவன் என்ற ரீதியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இது பிற பிரதேசங்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடாகவே நான் இதைக்கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

இக்குடிநீர் வழங்கும் நிகழ்வில் வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன், இ.ஆர்னோல்ட் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைச்செயலாளர் சுதர்சன், ஊர் மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் இத்திட்டம் தொடர்ச்சியாக தீவகப்பகுதி முழுவதும் வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இன்னும் சில நாட்களில் விஸ்தரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக