திங்கள், 9 ஜூன், 2014

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட எரித்துக் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சாட்சியம்!!


இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட எரித்துக் கொலை செய்யப்பட்ட மற்றும் ஊர்காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றைய தினம் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற அமர்வில் ஆறு சாட்சிகள் மேற்படி குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழு முன்பாகத் தெரிவித்தனர்.

1990 ஆம் ஆண்டு கொழும்புக்குச் செல்வதாக எனது கணவர் தெரிவித்து விட்டுச்
செல்லும் போது வந்தாறு மூலையில் வைத்துக் கடத்தப்பட்டார். இராணுவத்தினராலேயே கடத்தப்பட்டிருந்தார். இது தொடர்பில் வந்தாறுமூலை இராணுவ முகாமில் நாம் சென்று கேட்ட போது அவர்கள் சொன்னார்கள், முகாமுக்கு பின்பாக ஒரு சடலம் எரிகின்றது. அதுவா என்று பார்க்கச் சொல்லி. அந்தச் சடலம் அரைகுறையாக எரிந்த நிலையில் இருந்தமையால் என்னால் அடையாளம் காண முடியவில்லை. இதுவரையில் எனது கணவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று ஒரு பெண்மணி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

இன்னுமொரு பெண்மணி சாட்சியமளிக்கையில், 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 திகதி ஆரையம்பதி முருகன் கோயிலுக்கு எனது கணவர் சென்றார். அவர் சென்று சிறிது நேரத்தில் அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்ற போது, அங்கு நின்றவர்கள் சொன்னார்கள், எனது கணவரை இராணுவத்தினர் சுட்டுப் போட்டு சி.ஜ.டியின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போகின்றனர் என்றும், அதன் பின்னால் இராணுவத்தினர் ட்ரக் வண்டியும் செல்வதாகத் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரையில் நான் எனது கணவனின் சடலத்தைக் காணவில்லை என்று சாட்சியத்தில் தெரிவித்தார். மற்றொருவர் தனது குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் 1991 ஆம் ஆண்டு மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் இராணுவத்தினரால் சுடப்பட்டனர் என்றும் ஆனால் அவர்களது சடலங்களைத் காணவில்லை என்றும் குறிப்பிட்டார். மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், தனது தந்தை 1991 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி கூலி வேலைக்குச் சென்றவர் என்றும், அவர் வீடு திரும்பி வரவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன் பின்னர் ஆணைக்குழுவினர் அவர் காணாமற்போனது என்று எவ்வாறு சொல்லுவீர்கள்? என்று கேள்வியெழுப்பினர்.

எங்களது வீட்டிற்கு அருகில் ஊர்காவல் படையினரின் முகாம் இருந்தது. அந்த முகாமைத் தாண்டித்தான் வீட்டுக்கு வர வேண்டும். எனது தந்தை வழமையாக மாலை 5.30 மணியளவில் வீட்டுக்கு வருவார். அன்றைய தினம் எனது தந்தை வழமையாக வரும் நேரத்தில் ஊர்காவல்படை முகாம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. இதன் பின்னர் மறு நாள் போய் பார்த்த போது எனது தந்தையின் சடலத்தைக் கண்டதாக அவர் சாட்சியமளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக