வியாழன், 12 ஜூன், 2014

அமைதிக்கும் ஜனநாயகத்துக்குமான உயர்விருது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு! வழங்கிக் கௌரவிக்கின்றது பொலீவியா!!


எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொலீவியாவில் நடைபெறும் 'ஜி77' நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்குபற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்காக அவர் ஆற்றிய பணிக்கென உயர் விருது ஒன்றை அந்த நாடு வழங்கி கௌரவிக்க இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

தென் அமெரிக்க நாடான பொலீவியாவுக்கு விஜயம் செய்யும் முதல்
இலங்கைத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் ஜோன் டபிள்யூ. ஆஷ் உட்பட பலநாட்டுத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பொலீவியாவில் கூடவிருக்கின்றனர்.

இவர்களுள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் நாடாளுமன்ற மேன்மை விருதை பொலீவிய ஜனாதிபதி ஈவோ மொறலஸ் வழங்கிக் கௌரவிப்பார். சுதந்திரம் மற்றும் ஜனநாயக நிறுவகங்களுக்காக உழைத்த தனி மனிதர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு அந்த சேவைக்காக வழங்கப்படும் அங்கீகாரமே இந்த விருது என பொலீவியா அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று கொழும்பிலிருந்து புறப்பட்டார். பொலீவியா மாநாட்டுக்காக வருகை தரும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை ஜனாதிபதி இரு தரப்புப் பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக