சனி, 24 மே, 2014

இறுதிப்போர் குறித்து வெளியான புகைப்படத்தில் மற்றுமொருவரும் அடையாளம் காணப்பட்டார்.....!!!

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இளைஞர் யுவதிகள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு - சேறும் சகதியுமான கிடங்கொன்றுக்குள் விடப்பட்டுள்ள காட்சி அடங்கிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியிருந்தன. இந்த படத்தில் மிகவும் ஆழமான பகுதியில் மேலாடையின்றி கைகள் கட்டப்படாத நிலையில் இளைஞர் ஒருவர்
காணப்படுகிறார். அந்த இளைஞர் பருத்தித்துறையைச் சேர்ந்த பேரம்பலநாதன் பிரதீபன் (வயது - 35) என்பவர் என்று அவரது உறவினர் அடையாளப்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலூடாக இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் வழியில் எமது சகோதரன் காணாமல்போயிருந்தார். இது குறித்து நாம் மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், காணாமற்போனோரைக் கண்டறியும் குழு, காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் மன்னார் ஆயர் குழு என்பவற்றில் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறோம். அத்துடன் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில் வெளியான புகைப்படம் ஒன்றிலும் எமது சகோதரன் இருக்கிறார். அது தொடர்பிலும் முறைப்பாடுகளில் குறிப்பிட்டிருக்கிறோம்.- என்று பிரதீபனின் உறவினர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்தப் புகைப் படத்திலிருந்து பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என்று உறவினர்கள் அடையாளம் காட்டியிருந்தனர். இதன்பின்னர் குணலிங்கம் வீட்டுக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குடும்பத்தினரை அச்சுறுத்திவருகின்றனர் என்று தெரியவருகிறது. இந்த நொருக்கடிகள் காரணமாகப் பிரதீபனின் குடும்பத்தினரும் ஊடகங்களுக்கு தகவல்தர மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக