வெள்ளி, 30 மே, 2014

இரு சமூகங்களுக்கும் நிம்மதி தரும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் கண்டுள்ளோம் - கூட்டமைப்புடனான சந்திப்பில் ஹக்கீம்!!



"பரந்தளவில் முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கொள்கை அடிப்படையில் உடன்பாடுள்ளது. அரசியல் ரீதியான கூட்டான செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம்" - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில்
நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புடனான பேச்சில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், ரீ.கலையரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ், முஸ்லிம்கள் தொடர்பான தேசிய பிரச்சினைகள் உட்பட கல்முனை வடக்கு பிரதேச செயலகத் தரமுயர்த்தல் மற்றும், கல்முனை மாநகர சபையின் தமிழர் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பிலும் இந்த உயர் மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இணக்கப்பாடுகள் காணப்பட்டன.

இது பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:- "கல்முனை மாநகர சபைச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களிடையே நிலவும் முரண்பாடுகள், சந்தேகங்கள் தொடர்பில் பல விடயங்களைப் பரஸ்பர விட்டுக் கொடுப்போடு பரிமாறிக் கொண்டோம். "இரு சமூகங்களுக்கும் நிம்மதி தரும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க இணக்கம் கண்டுள்ளோம். "இதுவரை உடன்பாடுகளுக்கு வராதுவிட்டாலும், கொள்கையவில் எமக்குள் எந்த முரண்பாடுகளுமில்லை". - என்றார்.

கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இச்சந்திப்பு குறித்து தெரிவிக்கையில், "அன்றாடமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான பிரச்சினைகள், மாநகரசபை (கல்முனை) மற்றும் வெளிப்பிரச்சினைகள் பற்றி இரு தரப்பினரும் பேசினோம். "எதிர்காலத்தில் பிரச்சினையில்லாத அணுகுமுறை பற்றித் தீர்மானித்தோம்.

தேசிய ரீதியான இணக்கப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் பேசுவோம். அனைத்து விடயங்களிலும் தேசிய மட்டத்தில் இணக்கமாக வேலை செய்ய உடன்பாடுகள் காண்போம்." - என்றார். இன்றைய பேச்சு வெற்றிகரமாக இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக