ஞாயிறு, 25 மே, 2014

பயங்கரவாதச் செயலுக்கு சாட்சியங்கள் இல்லாத தரப்புகளை பட்டியலிலிருந்து நீக்குக! இலங்கை அரசிடம் சம்பந்தன் கோரிக்கை!!


புலம்பெயர் அமைப்புக்களையும் தனியாட்களையும் பட்டியலிடும் தனது முடிவை இலங்கை அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், 2005 ஆம் ஆண்டின் சட்டத்தில் 'பயங்கரவாதச் செயல்' என வரையறுக்கப்பட்ட விடயத்தில் ஈடுபட்டமைக்கு அல்லது அதற்கு உதவியமைக்கு சாட்சியங்கள் இல்லாத அமைப்புக்களையும் தனியாட்களையும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த
அறிக்கையின் முழு விவரமும் வருமாறு:- 2014 மார்ச் 21 ஆம் திகதிய 1854/41 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும் தனியாட்களையும் இலங்கை அரசு பட்டியலிட்டமையை சந்தேகத்துக்கு இடமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்க விழைகின்றது. இந்த வர்த்தமானி அறிவித்தல் 2012 மே 15 ஆம் திகதிய 1758/19 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஐ.நாவின் 2012 இன் முதலாம் இலக்க ஒழுங்கு விதிகளின் கீழ் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் 2014 மார்ச் 25 ஆம் திகதி 'இலங்கையில் மீள்நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் போன்றவற்றை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் 25/01 பிரேரணை, ஏற்றுக் கொள்ளப்பட்ட செயற்போக்கை ஒட்டிய சமயத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய அமைப்புக்களுக்கும் தனியாட்களுக்கும் அவ்வாறு பட்டியலிட்டமை குறித்து அறிவிப்பதற்கு தகுதிவாய்ந்த அதிகாரி அனைத்து நியாயபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என ஐ.நாவின் 2012 இன் முதலாம் இலக்க ஒழுங்கு விதிகளின் 7 ஆம் பிரிவு வலியுறுத்துவதை குறிப்பிட்டுச் சுட்ட விரும்புகிறோம். அதற்கு மேல், அத்தகைய எழுத்துமூல அறிவித்தலில் அப்படி பட்டியலிட்டமையுடன் தொடர்பான காரணங்களும் அடங்கியிருக்க வேண்டும் என்பதை அந்த ஒழுங்குவிதி கொண்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரமாகி இரண்டு மாதங்கள் கடந்து விட்ட போதிலும் கூட இத்தகைய அமைப்புகளையும் தனியாட்களையும் பட்டியலிட்டமைக்கான எந்தக் காரணத்தையும் முன்வைக்க இலங்கை அரசு தவறிவிட்டது. எந்த ஓர் அமைப்பையும் அல்லது தனியாளையும் அப்படிப் பட்டியலிடுவதாயின், அத்தகைய அமைப்பு அல்லது தனியாள் பயங்கரவாதச் செயல் ஒன்றை செய்தமையை அல்லது செய்ய முயன்றமையை அல்லது அதில் ஈடுபட்டமையை அல்லது அதைச் செய்வதற்கு ஒத்துழைத்தமையை நம்ப வைக்கும் விதத்தில் நியாயமான காரணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாம் குறித்துக் காட்டுகின்றோம். ஐ.நாவின் 2012 இன் முதலாம் இலக்க ஒழுங்கு விதிப்படி 'பயங்கரவாதச் செயல்' என்பதன் வரைவிலக்கணம், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலைத் தடுக்கும் 2005 இல் 25 ஆம் இலக்க பட்டயத்தில் விசேடமாகக் கூறப்பட்ட அதே அர்த்தத்தைக் குறிப்பதாகும். இந்தப் பின்புலத்தில், மேற்படி எழுத்துமூல முன் அறிவித்தல், இந்தக் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட விசேட வரைவிலக்கணத்தின் தெளிவின் அடிப்படையில், அத்தகைய அமைப்புகளையும் தனியாட்களையும் பட்டியலிட்டமைக்கான காரணங்களை விளக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட பல அமைப்புகள் மற்றும் தனியாட்களில் பல தரப்பினர் - தேசியப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேணவாவை ஆதரிப்பவர்கள் ஆவர்.

அத்தகைய தீர்வுக் கட்டமைப்புக் குறித்து எங்களால் தொடர்ந்து பல தேர்தல்களில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு தமிழ் மக்களால் அது அங்கீகரிக்கப்பட்டுமுள்ளது. உதாரணத்துக்கு 2012 ஜனவரி 14 ஆம் திகதி உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பை குறிப்பிட விரும்புகிறோம். அது பின்வருமாறு கூறுகின்றது:- "தேசியப் பிரச்சினைக்கு நிலைத்து நீடிக்கக்கூடிய கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஒ'ரு வருடமாக இலங்கை அரசுடன் ஈடுபட்டு வருகின்றது. அத்தகைய தீர்வு தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களது பூர்வீக வாழிடப் பிரதேசங்களை சுயாட்சி செய்வதற்கான சுயநிர்ணய உரிமையை மீண்டும் மாற்ற முடியாத வகையில் அவர்கள் பெறுவதை அங்கீகரிக்கும் விதத்தில் அரசுக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைவது அவசியமாகும். அத்தகைய ஏற்பாடு ஒன்றுக்கு இணக்கம் காணப்படுமானால் நாம் எமது பங்குக்கு அதற்கு முழு ஆதரவு தருவோம். அத்தகைய ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வுக்கு முன்வருமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் தூண்டுவதுடன், அத்தீர்வு நேர்மைத் திறனுடன் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவும் வேண்டும்." உலகத் தமிழர் பேரவை என்ற குடையின் கீழ் மேலும் பல புலம்பெயர் அமைப்புகள் அதன் அங்கத்துவ அமைப்புக்களாக உள்ளன. இலங்கை அரசு இவற்றில் சில அமைப்புக்களையும் உலகத் தமிழர் பேரவையுடன் சேர்த்துப் பட்டியலிட்டுள்ளது. மேலும் 2005 ஆம் ஆண்டின் சட்ட விதிப்படி 'பயங்கரவாதச் செயல்' என்று வர்ணிக்கப்படக்கூடிய எந்தச் செயலுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத போதிலும்கூட மேலும் பல அமைப்புக்கள், அவற்றைப் பட்டியலிடுவதை நியாயப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் இன்றியே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அமைப்புக்கள் மற்றும் தனியாட்கள் பிளவுபடாத நாட்டுக்குள் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாகவும் தொடர்ச்சியாகவும் வலியுறுத்தி வந்துள்ளமை கண்கூடு. உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் அரசியல் தீர்வுக்கான தங்களின் இலக்கு எப்படி அமையும் என்பதை விளக்கும் வகையில் 'அமைதியான ஶ்ரீலங்காவுக்கான நகல் வடிவம்' என்ற தலைப்பில் 2010 ஜூலையில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. அது இப்படி விவரிக்கின்றது:- "இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சம உரிமையையும் சந்தர்ப்பத்தையும் தரும் அரசியல் தீர்வு, பெரிய - சிறிய கட்சிகளின் பற்றுறுதியான ஈடுபாட்டுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் முன்னெடுக்கப்படவேண்டும்." இதேபோன்று கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அண்மையில், 2013 செப்ரெம்பரில், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைப் பாராட்டிய சமயம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது:- "இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள அவர்களது அபிலாஷைகளை ஏற்று அங்கீகரித்து, உடனடியாக 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும்படி கனேடிய தமிழ்க் காங்கிரஸில் உள்ள நாங்கள் இலங்கை அரசைக் கோருகின்றோம். தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு இலங்கை அரசு 13 ஆவது திருத்தத்தையும் தாண்டி வெகுதூரம் செல்ல வேண்டும் என்பது தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து தெளிவாகியுள்ளது. எனவே, நாம் சர்வதேச சமூகத்தை, குறிப்பாக இந்தியாவை, இலங்கையில் உள்ள தமிழர்களின் சட்டபூர்வமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தச் செய்வதற்கு தங்களின் முழுச் செல்வாக்கையும் பிரயோகிக்கும்படி வேண்டுகின்றோம். அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தத் தேர்தலில் வாக்களித்தமை மூலம் தங்களின் ஜனநாயக உரிமையைப் பிரயோகித்த வட பகுதி மக்களை கனேடிய தமிழ்க் காங்கிரஸ் நன்றி தெரிவித்துப் பாராட்டுகின்றது. கனேடிய தமிழ்க் காங்கிரஸ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மதித்து அங்கீகரிக்கும் அதேசமயம், உண்மையான சமத்துவம், நீதி, சமாதானம், எமது மக்களுக்கான கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நீதியரசர் விக்னேஸ்வரனினதும் அவாவில் ஒன்றுபட்டு நிற்கின்றது." தேசியப் பாதுகாப்புக்கு வன்முறை அச்சுறுத்தல் வருமாயின் அதனை முறியடிக்க - உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமைவானதாக - பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்த ஓர் அரசுக்கும் உள்ள உரிமையை ஏற்றுக் கொள்ளும் அதேசமயம், அரசின் இந்தப் பிற்போக்குத்தனமான நடவடிக்கை, மீள் நல்லிணக்க உணர்வுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு முற்றிலும் ஒத்ததாக இருப்பதை ஆழ்ந்த கவலையோடு சுட்டிக் காட்டுகின்றோம். அத்தகைய செயற்பாடுகளில் தனியார் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்தல், கண்மூடித்தனமான கைதுகள், தடுப்புக் காவல்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமழ் இளைஞர்களுக்கு 'புனர்வாழ்வு' ஆகியவையும் அடங்கும். எனவே, மேற்படி அனைத்து அமைப்புக்களையும் தனியாட்களையும் பட்டியலிடும் தனது முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறும், 2005 ஆம் ஆண்டின் சட்டத்தில் விவரிக்கப்பட்டமைக்கு அமைவான 'பயங்கரவாதச் செயலில்' ஈடுபட்டமை அல்லது அதற்கு உதவியவை தொடர்பில் சாட்சியங்கள் ஏதும் இல்லாத அமைப்புகள் மற்றும் தனியாட்களை பட்டியலில் இருந்து நீக்கும்படியும் அரசைக் கோருகின்றோம் - என்று உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக