செவ்வாய், 27 மே, 2014

அடிப்படை வசதிகள் இன்றி அல்லலுறும் முல்லைத்தீவு மன்னாகண்டல் மக்கள்!! (இனியாவது கவனம் செலுத்துவார்களா மக்கள் பிரதிநிதிகள்)

{பூர்வீகம் செய்திகளுக்காக திருமலையிலிருந்து கான்(khan) மற்றும் தருண்}

போரினால் முற்றாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு   மன்னாகண்டல் பகுதிக்கு இதுவரை எந்த மக்கள் பிரதிநிதிகளும் எந்தவித நிரந்தர கட்டுமான பணிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென பிரதேச கல்விமான்களும், மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பல உறுதியுரைகளை தேர்தல் காலங்களில் முன்வைத்து வெற்றியீட்டிய மாகாண சபை உறுப்பினர்களோ அல்லது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ இன்னும் இப்பகுதிக்கு வராமையால் மக்கள் பிரச்சனைகள் வெளிக்கொணர முடியாமல், பூர்வீகம் செய்தியாளரை நாடிய எமது மக்கள் , முன்வைக்கும் அரசியல் பொருளாதார சமூக பிரச்சனைகளை எமது பூர்வீகம் செய்தியாளர் தொகுத்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையாவன-


(எமது செய்தியாளரை சந்திக்க மக்கள் கட்டிட வசதி எதுவும் இல்லாமல் மரத்தின் கீழ் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது)

1. எமது பிரதேசத்திலிருந்து முத்தையன்கட்டு பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து வசதிகள் இன்றி, காலை 7.30 க்கு புறப்படும் புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் ஊடாக செல்லும் வவுனியா பேரூந்தில் மக்களும் மாணவர்களும் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது சேவையில் ஈடுபடும் பேரூந்து நடத்துனர் தகாத வார்த்தைகளால் மாணவர்களை பேசுவதும், மற்றும் முறைகேடாக நடந்துகொள்ளுவதாகவும், இது தொடர்பாக பெற்றோர் கடிதம் மூலம் தனியார் பேரூந்து சங்கத்திற்கு அறிவித்த போதும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

( வவுனியாவிலுருந்து பரந்தன் ஊடாக தமது சேவையை வழங்குவதாக போலியான வார்த்தை பிரயோகங்களை பாவித்து மக்களை நெடுங்கேணி ஊடாக அழைத்து செல்வதாகவும் சிலர் குறிப்பிட்டனர்)

2. திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 1986/1989 காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் இப் பிரதேசத்தில் குடியேறி, இன்றுவரை இப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மக்கள்  மத்திய வகுப்பு காணிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த நிலம் இல்லாத காரணத்தினாலும், அரச காணிகள் பகிர்ந்தளிக்க போதுமானதாக இல்லாமையால் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  அவுஸ்ரேலிய ஐரோப்பிய இணைந்த வீட்டுத்திட்டம் இழுபறி நிலையில் உள்ளது.

(75 வீதமான மத்திய வகுப்பு காணிகள் 20 வருட பழமைவாய்ந்த காடுகளைப்போல் காட்சிதருவதும் கவலையளிக்கிறது)

3. பேராறு அணைக்கட்டு, கிராம அலுவலர் பிரிவு, கெருடமடு பிள்ளையார் ஆலய புனரமைப்பு, முன்பள்ளி, உள்ளக வீதி புனரமைப்பு, மக்களுக்கான குடிநீர் வசதி, மின்சாரம்  என்பனவற்றை எல்லாம் வட மாகாண சபையை வெல்வதன் மூலம் நிறைவேற்ற முடியும் என வாக்குறுதி வழங்கியதும் அதனை கேட்ட கிராம அபிவிருத்திச்சங்கம், கமக்கார அமைப்பு, மாதர் அபிவிருத்திச்சங்கத்துடன், விளையாட்டு கழகமும் இணைந்து புதுக்கிடியிருப்பு மற்றும் ஒட்டிசுட்டான் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 75 மேற்பட்ட கிராமங்களில் தமது பிரச்சாரங்களை மேற்கொண்டனர், தமது சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து மக்கள் வைத்திய பிரதிநிதிக்கென   திரண்டு வாக்குப்பலம் சேர்த்தனர். வெற்றியின் பின் பல மாதங்கள் கடந்தும் இவரது பாரா முகம்   மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, தங்களுடன் கதைப்பரா என்ற ஏக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

4.வரலாற்று சிறப்பு மிக்க இப் பிரதேசத்தின் வளங்களாகிய மணல், கிரவல் என்பன இவ் மக்களை விட ஏனைய தென்னிலங்கை ஒப்பந்த காரர்கள் அத்துமீறி வளங்களை அபகரித்துவரும் போதிலும், இதனை தடுத்து நிறுத்த சென்ற உதவி பிரதேச செயலாளருக்கும், அரச ஊழியர்களும் அச்சுறுத்தப்பட்டு, உரிய வாகன தகட்டு இலக்கத்துடன் பொலிசாரிடம்  வாய் மூல முறைப்பாடு வழங்கியபோதும் எவ்விதமான நடவடிக்கைகளும் இன்றி பார ஊர்தியும் சாரதியும் விடுவிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விடயம்.

5. இன்று கூட 3ஆம் கண்டம் கிராமத்தில் எதியோப்பியா மற்றும்  சோமாலியா போன்ற பிரதேச மக்கள் போல் வறுமையில் , எமது உறவுகள் நீருக்காகவும், உணவுக்காகவும் அலைந்து திரியும் நிலைமை காண்போர் மனதை உருக்குகிறது. இது தொடர்பாக பூர்வீகம் செய்தியாளர் வினாவிய போது, இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அனைவரும் தமக்கென சொந்த காணிகள் இல்லாமையினாலும், பொதுக்க்கிணறுக்கான  பொதுக்காணிகள் இல்லாமையினாலும் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இன்று இவ் நிலைமையில் தாம் வாழ்வதாக எமது பூர்வீகம் செய்தியாளரிடம் கவலை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

6. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள் இதுவரை மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

 வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே, மற்றும்  மாகாண சபை உறுப்பினர்களே இக் கிராமம் தொடர்பாக  அடையாளப்படுத்தப்பட்ட  சமூக பொருளாதார பிரச்சனைகள் மக்களின் தீர்வினை நோக்கி  உங்களுக்காக......

இது தொடர்பான தங்களின்  விளக்கங்களை பூர்வீகம் செய்தி சேவை பிரசுரிக்க, எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக