செவ்வாய், 27 மே, 2014

இயக்கச்சிப் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்!!


பொதுக்கிணற்றில் குடிதண்ணீர் எடுப்பதற்குப் படையினர் தடை விதித்ததைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் இயக்கச்சிப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இயக்கச்சிச் சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு ஆகிய உப்பளங்களின் பணியாளர்களின் பயன்பாட்டுக்கென உப்பளங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது. அந்தக் காலம்
தொடக்கம் இயக்கச்சிப் பகுதி மக்கள் மூன்று கிணறுகளிலும் குடிதண்ணீர் எடுத்துவந்தனர். ஆனையிறவு படைமுகாமுக்கும் இந்தக் கிணற்றிலிருந்துதான் குடிதண்ணீர் பெறப்பட்டு வருகிறது இயக்கச்சிப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் இயக்கச்சிச் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், மற்றும் கடை வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல்வேறுபட்ட தரப்பினர் இந்தக் கிணற்றிலேயே குடிதண்ணீர் எடுத்துவந்தனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள முகாமிலிருந்து வந்த படையினர், பொதுமக்கள் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்குத் தடைவிதித்தனர்.

இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிதண்ணீருக்காக வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பளை பிரதேச சபையினருக்கு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இன்று காலை 9.00 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கச்சிச் சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. படையினர் தற்போது இந்தக் கிணற்றிலிருந்து பவுஸர்களில் தண்ணீர் எடுத்துச் செல்வதால் பொதுமக்கள் பாவனைக்குத் தடை விதித்திருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக