திங்கள், 5 மே, 2014

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி நிர்க்கதியான மக்களுக்கு உதவுங்கள் – ஆனந்தன் அழைப்பு!!!

நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றினை ஆதரித்து வாக்களிக்கமையால் பழிவாங்கப்பட்ட 57 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் இருக்க இடமின்றி நிர்க்கதியான நிலையில் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.

வவுனியா மாவட்டம் வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கன்னாட்டி கிராமத்தினைச் சேர்ந்த 57 குடும்பங்கள் சுழல் காற்றினாலும் மழையினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்துள்ளன. அந்த
மக்களைச் சந்தித்து அவர்களின் நிலை தொடர்பில் அறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றக் கிராமமான கன்னாட்டியில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 337 பேர் வாழ்ந்துவருகின்றனர். மல, சல கூடும், போக்குவரத்து வசதிகள், மின்சாரம் உட்பட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் மன்னார் ஆயரின் ஏற்பாட்டில் J.R.S நிறுவத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

மீள்குடியேறிய குறித்த கிராம மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்ட நிதியின் கீழ் வீடுகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதியில் அது வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக அந்தக் கிராம மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிய சுழல் காற்று மற்றும் அடைமழை காரணமாக 57 குடும்பங்கள் இடம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பத்துக்குடும்பங்களின் தற்காலிக வீடுகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

குழந்தைகள், வயோதிபர்கள், நோயாளர்கள் என்ற விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டிய மக்கள் பொதுநோக்கு மண்டபத்திலேயே தமது வாழ்க்கையை கழிக்கவேண்டிய அவலம் தொடர்கிறது. 57 குடும்பங்களுக்கும் சிறிய பொதுநோக்கு மண்டபம் உறங்குவதற்குக்கூடப் போதுமானதாக இல்லை. அதனைவிடவும் அவர்களின் உணவுத் தேவை என்பதும் மிகவும் நெருக்கடியானதாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில் அந்த மக்களுக்கு உடனடியான உணவுத்தேவைகளை நிறைவு செய்தவதற்கு பொது அமைப்புக்களும் தொண்டுநிறுவனங்களும் முன்வரவேண்டும்.

இதேவேளை இந்தக்கிராம மக்களுக்கு நிரந்தவீடுகள் இதுவரையில் கிடைக்காமல் போனமைக்கு அரசியல் பழிவாங்கலே காரணம் என்று தெரியவந்திருக்கிறது. இறுதியாக நடைபெற்ற தேர்தலில் அந்தக் கிராம மக்கள், மத்தியஅரசில் பலம் வாய்ந்த அரசியல் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்காமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே அவர்களுக்கான வீடுகள் வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.

இவ்வாறான அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளில் கூட கை வைக்கும் அசிங்கமான வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவதை விடுத்து அரச அதிகாரிகள் நீதியை நோக்கி தமது பணியினை முன்னெடுக்கவேண்டும். இந்த மக்களின் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக