வெள்ளி, 16 மே, 2014

குருணாகல் கான்ஸ்டபிள் கொலை : அபகரிக்கப்பட்ட உடைகள் எரிப்பு, 100 பேரிடம் புலனாய்வு விசாரணை!!!

குருணாகல், கெட்டுவான சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் ஆடைகளை நீர்கொழும்பில் சந்தேக நபர்கள் வாடகைக்கு தங்கியிருந்த வீடொன்றில் வைத்து எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் புலனாய்வு பிரிவினர், இக் கொலைச்
சம்பவம் தொடர்பில் சுமார் 100 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அவர்களை கைது செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட  புகைப்பட ஆதாரங்கள் ஊடக பல தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பல முக்கிய தகவல்கள் அதில் அடங்குவதாக சுட்டிக்காட்டுகின்றது.

இதனிடையே இந்த சம்பவத்தின் போது வேனை செலுத்தியதாக கூறப்படும் நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையக் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின. எனினும் இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பொலிஸ் தலைமையக தகவல்களின் பிரகாரம் பொலிஸாரை கடத்திச் சென்ற நால்வர் கொண்ட குழு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த  குழு மாத்தறை, தம்புள்ளை, வென்னப்பௌவ மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களை சேர்ந்த நால்வரைக் கொண்டது என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ள வேன் வென்னப்புவ பகுதியில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையம் ஒன்றிலிருந்து இந்த குழு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந் நால்வரும் சிறைகளில் தண்டனை அனுபவித்த காலப்பகுதியிலேயே ஒருவரை ஒருவர் அறிமுகமாகியுள்ளதாகவும் அவர்களில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸார் மீதுள்ள வைராக்கியம் காரணமாக இந்த கடத்தல் கொலை இடம்பெற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் இந்த சம்பவத்துக்கு முன்னர் இந்த குழு நாரம்மலை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலும் வேவல்தெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த குழுவானது நாடளாவிய ரீதியில் பல முக்கிய கொள்ளைகளுடன் தொடர்பு பட்டுள்ளதா என்ற கோணத்திலும் பொலிஸாரின் விசாரணைகள் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக