செவ்வாய், 9 நவம்பர், 2010
சிறைச்சாலை நிர்வாகத்தை இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம்..!
சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளைக் கைதுசெய்து அதன் நிர்வாகத்தை இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருமாறு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலை வேண்டி அங்கவீனமுற்ற இராணுவவீரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் இடம்மாற்றப்பட்டுள்ளது. 30மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்துவதற்கு நேற்று அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொரளை கெம்பல் மைதானத்துக்கு அருகில் கூடி அங்கிருந்து பேரணியாக சென்று சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அரசதரப்பு ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகக் கூடி நேற்று முன்தினம் சிறைக்கைதிகளால் பொலிஸார்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதேநேரம் இந்தத்தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், அதிகாரிகள் ஆகியோர்மீது குற்றம் சுமத்தியதுடன் அவர்களைக் கைதுசெய்து சிறைச்சாலைகள் நிர்வாகத்தை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது, இதேவேளை, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களும் கெம்பல் மைதானத்துக்கு அருகில் கூடி நின்றிருந்தனர். இதனை அவதானித்த பொலிஸார் இரண்டு வௌ;வேறு ஆர்ப்பாட்டங்கள் ஒரேயிடத்தில் நடத்தப்படுவது சாத்தியமற்றது என்றும் அது பிரச்சினைகளுக்கும் வழிவகுத்து விடும் என்றும் கூறியதுடன் கொழும்பின் வேறு எந்த பகுதியிலாவது சென்று உங்களது ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று பொன்சேகா தரப்பு ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உடனடியாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு மாற்றப்பட்டது. கொழும்பு தெவட்டஹா பள்ளிக்குமுன்பாக கூடிய மேற்படி இராணுவவீரர்கள் அவ்விடத்தில் நின்றவாறு ஜனாதிபதிக்கு எதிராகவும் அதேநேரம் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் பாரிய கோஷத்தை எழுப்பினர். இதன்பின்னர் லிப்டன் சுற்றுவட்டம் வரையில் பேரணியாக வந்து சுற்று வட்டத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யும் பயணத்துக்காக உறுதிமொழிகளும் எடுத்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக