வெள்ளி, 12 நவம்பர், 2010
வைத்தியர்களின் சம்பளத்தை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கக் கோரிக்கை..!
அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களின் சம்பளத்தை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்குமாறு அரச வைத்தியர்களின் சங்கம் கடந்த 08ம் திகதி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பொன்றில் வைத்து மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் உபதலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அரச மருத்துவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படாவிடின் அவர்கள் அரச சேவையிலிருந்தும் வெளியேறி தனியார் வைத்தியசாலை களுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்த இயலாது போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அரச வைத்திய நிபுணரொருவரின் சம்பளம் 42 ஆயிரத்து 390 ரூபாவாகவும், சாதாரண வைத்தியர்களின் சம்பளம் 26 ஆயிரத்து 160 ரூபாவாகவும் உள்ளதெனவும், இது எந்த விதத்திலும் போதுமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகிப்போர் மிகப்பெரும் தொகையில் சம்பளங்க ளைப் பெறுவதாகவும், அரச சேவையில் உயர் பதவிகளை வகிப்போர் விடயத்தில் பெரும் அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வைத்தியர்களுக்கு அவர்களது சம்பளத்தை விடவும் போக்குவரத்து கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாவும் விபத்துக் கொடுப்பனவொன்றும் வழங்கப்பட்டாலும் அவையும் போதுமான தொகைகள் அல்ல எனவும் அவர் தெரிவித்ததுடன் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து மற்றும் விபத்துக்கான கொடுப்பனவு 21 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். 2006, 06இலக்க சம்பளச் சுற்று நிருபத்துக்கு அமைய அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 11 ஆயிரத்து 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் அந்தச் சம்பளக் கொள்கைக்கு அமைய அரச ஊழியர்களின் ஆகக்கூடிய மற்றும் கீழ்மட்ட சம்பளத்துக்கு இடையிலான விகிதாசாரம் 1:4 மட்டம் வரையில் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் அந்த விகிதாசாரம் 1,12 ஆக இருந்தது புதிய சம்பள விகிதாசாரம் காரணமாக உயர் பதவிவகிப்போருக்கு அநீதி இழைக்கப்பட்டது. ஒரே இரவுக்குள் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென நாம் கோரவில்லையெனவும், இது தொடர்பாக திறைசேரி, அரசு, மற்றும் சம்பள ஆணைக்குழு என்ற முத்தரப்பும் கலந்துரையாட வேண்டும் எனவும், சம்பள அதிகரிப்பைப் பெறுவது தொடர்பான தமக்குள்ள தொழிற்சங்க ஆற்றல் இன்று பயன்படுத்தப்படாதிருப்பது குறித்தும் தாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது எனவும் வைத்தியர் பாதெனிய தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக