செவ்வாய், 9 நவம்பர், 2010

வடக்கு, கிழக்கு உள்ளுர் சேவை அபிவிருத்திக்கு உலக வங்கி 5.75 பில்லியன் கடனுதவி..!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளுர் சேவை அபிவிருத்தித் திட்டத்துக்கு உலக வங்கி 5.75 பில்லியன் (575 கோடி) ரூபா கடனுதவி வழங்கியுள்ளது. இதன்கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூ ராட்சி சபைகளின் சேவைகள் அபி விருத்தி செய்யப்படவிருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. இதன் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உட்கட்டுமானங்கள், வீதிகள் என்பன புனரமைக்கப்படவிருப்பதுடன், பொதுக் கட்டடங்கள், பாலங்கள் என்பனவும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 பிரதேச சபைகள், வடக்கிலுள்ள 9 நகர சபைகள், கிழக்கிலுள்ள 3 நகரசபைகள் மற்றும் இரு மாகாணங்களிலுமுள்ள மாநகர சபைகளின் சேவைகள் இந்தத் திட்ட த்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த மேம்பாட்டுத்திட்டம் 2013ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைவிட சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைப்புக்களை அபிவிருத்தி செய்யவும் உலக வங்கி 6.47 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைப்புகளுக்கு குறுகிய, நீண்டகாலக் கடன்கள் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படவிருப்பதுடன் உலக பொருளாதார வீழ்ச்சியால் தொழில் முனைப்புகள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளுக்கும் கடனுதவி வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பிரச்சினையைக் குறைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைப்புகள் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிறுவனங்களுக்கு கடன் உதவிகளை வழங்கி முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, இலங்கையின் உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்திக்கும் உலக வங்கி உதவிகளை வழங்கவுள்ளது. இதன்படி 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக உல்லாசப் பயணத்துறை அபிவிருத்திக்கு வழங்கப்படவுள்ளது. இதனைக் கொண்டு கிழக்கு மாகாணத்தை உல்லாசப் பயண மையமாக அபிவிருத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக