புதன், 13 அக்டோபர், 2010

மட்டக்களப்பு, கெவிலியாமடு அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை..!

மட்டக்களப்பு, கெவிலியாமடு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மட்டு. மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் ஹிஸ் புல்லா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் கெவிளியாமடு குடியேற்றம் தொடர்பான விவகாரம் அங்கு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அங்கு தெரிவித்தவை வருமாறு, கெவிலியாமடுவில் 40 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. அதன் பின்னர் தற்போது 210 குடும்பங்களாக அதிகரித்துள்ளன. நான் ஆதாரம் இல்லாமல் பேசுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். என்னிடம் சகல ஆதாரங்களும் உள்ளன. தேவை என்றால் அவற்றை சமர்ப்பிக்க நான் தயார். இப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்களை மாகாண முதலமைச்சர், மாவட்ட அரச அதிபர், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட விவசாயிகள் அடங்கிய குழுவினர் சென்று பார்வையிட வேண்டும் என்று தெரிவித்தர். அரியநேத்திரனின் முறைப்பாட்டை அடுத்து, கெவிளியாமடு பிரதேசத்தில் குடியேறியுள்ள சிங்களக் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பட்டப்பளைப் பிரதேச செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. அத்துடன், அப்பகுதியை முதலமைச்சர் மற்றும் அரச அதிபர்கள் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிடவும் தீர்மானிக்கப்பட்டது. பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரச அதிபர், மாகாண சபை உறுப்பினர் கள், பிரதேசசபை உறுப்பினர் கள் மற்றும் பல அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக