வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நாடாளுமன்ற சபைக்கு கூட்டமைப்பு எம்.பி நியமிக்கப்பட்டமை நிராகரிப்பு..!!

பதினெட்டாவது அரசமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக தமிழ்க் கூட்டமைப்பு எம்.பியை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்ததை அக்கட்சி நிராகரித்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற சபைக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்திருந்தார். 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். அத்துடன் அதனை எதிர்த்தே வாக்களித்தோம். எனவேதான், நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக என்னை விக்கிரமசிங்க நியமித்ததை நிராகரித்தேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று தெரிவித்துள்ளார். 18ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டமூலத்தின் கீழ் ஏற்கனவே இயங்கிய அரசியல் சபைக்கு பதிலாக உருவாக்கப்படவுள்ள நாடாளுமன்ற சபையில் ஐவர் அங்கம் வகிப்பர். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கும் இரு பிரதிநிதிகளும் அடங்குவர். இவர்கள் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது 18வது திருத்தம் சட்டத்தின் விதி. நாடாளுமன்ற சபைக்குத் தத்தமது பிரதிநிதிகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நியமிக்குமாறு பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் ஏற்கனவே கடிதம்மூலம் தெரியப்படுத்தி இருந்தார். இந்நிலைமையிலேயே எம்.ஏ.சுமந்திரனின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருந்தார். ஆனால் அவர் அந்தப் பதவியை மேலே கூறிய காரணங்களை முன்வைத்து நிராகரித்துவிட்டார். இதேவேளை, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக ஐ.தே.கட்சி தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள அதேவேளை, இத்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு பிரதிநிதியை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டது ஆச்சரியமளிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும் தான் மேற்படி நாடாளுமன்ற சபையைப் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக