புதன், 22 செப்டம்பர், 2010

இலங்கை தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய, பா.ஜனதா கூட்டணி கட்சிகள் அடங்கிய குழு, விரைவில் இலங்கை செல்கிறது..!!

இலங்கை தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய, பா.ஜனதா கூட்டணி கட்சிகள் அடங்கிய குழு, விரைவில் இலங்கை செல்கிறது. இலங்கையில் போர் முடிவடைந்து ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகியும் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் சரியாக சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் அரசு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு முகாம்களில் இருந்து அவர்களது சொந்த இடங்களுக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள், வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மத்திய மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்று அடைந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழர்களின் உண்மைநிலையை கண்டறிய, அனைத்துக் கட்சி தலைவர்களை கொண்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் சார்பாக பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்து விட்டது. தற்போது, காஷ்மீரில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டறிய, மத்திய அரசு அனைத்து கட்சி குழு ஒன்றையும், அந்தக் குழுவுடன் பத்திரிகையாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதேபோல, பா.ஜனதா தலைமையில் விரைவில் ஒரு குழு, இலங்கைக்கு சென்று அங்குள்ள உண்மை நிலவரத்தை ஆராய்ந்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. பா.ஜனதா தலைமையிலான இக்குழுவில் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா மற்றும் சில தமிழக கட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் ஆரம்பத்திலிருந்தே இலங்கைப் போரில் இலங்கை அரசை கடுமையாக சாடி வந்தது பாஜக மட்டுமே. அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்று குவித்து வருவதை நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மிகக் கடுமையாக சாடிப் பேசினார். தேசிய அளவில் ஈழத் தமிழர்களுக்காக ஒரே குரலில் தனது கருத்தை ஒலித்து வரும் கட்சியும் பாஜக மட்டுமே. இந்த நிலையில் தற்போது தேசிய அளவில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்து உண்மையைக் கண்டறிய அது திட்டமிட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறவுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் சிலவும் கூட இடம்பெறும் எனத் தெரிகிறது. அதிமுகவும் கூட இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இக்குழு இலங்கை செல்லலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக