புதன், 29 செப்டம்பர், 2010
ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது : அரியநேத்திரன்..!!
"தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைக் கையாளும்போது ஐக்கியத் தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது. தமிழரைத் திருப்திப்படுத்த தமிழர்களுக்கு சார்பாகவும் சிங்களவரைத் திருப்திப்படுத்த சிங்களவர்களுக்கு சார்பாகவும் பேசி, அரசியல் நடத்துகிறது." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கியத் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக கருத்துக்களுக்குப் பதிலளித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க எவ்வாறு கூறமுடியும்? புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.ஆனால் தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுப் போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. இந்த ஜனநாயகப் போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக அத்தநாயக்க கூறுவது எந்த வகையில் நியாயம்? தமிழ் மக்களை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஐக்கியத் தேசியக் கட்சி இவ்வாறு கூறுவதன்மூலம் அதன் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக