வெள்ளி, 19 மார்ச், 2010
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தரப்பை நிச்சயமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பேன் -ஜனாதிபதி..!
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தரப்பை நிச்சயமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பேன். ஆனால், புலிகள் கேட்டதை அவர்கள் கோரமுடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழர்களின் புதிய தலைமுறையினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருப்பதுடன் சமஷ்டி முறையிலான தீர்வும் இலங்கைக்கு பொருத்தமற்றது என்று உறுதியாக நிராகரித்துள்ளார். சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ரவி வெல்லூருக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கிராமப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எனது நோக்கம். வடக்கு, தெற்கு உட்பட முழுநாட்டையும் அபிவிருத்தி செய்வோம். சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. அபிவிருத்தியின்றி சமாதானம் இல்லை முகாம்களில் இருப்பவர்களிடம் கேட்டால் அரசியலமைப்பு திருத்தத்தை விட வீடு தேவை, பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் என்றே கூறுகின்றனர். தேர்தலுக்குப் பின்னர் புதிய எம்.பி.க்களுடன் கலந்துரையாட விரும்புகிறேன். வடக்கு, கிழக்கை இணைக்க மாட்டேன். முழு நாட்டையுமே ஒன்றிணைப்பேன். சமஷ்டியானது இலங்கையில் செல்வாக்கு பெறாத வார்த்தையாகும். பிரிவினையுடன் இது அதிகளவு தொடர்புபட்டதொன்றாகும். 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை நான் ஆதரிக்கமாட்டேன். இலங்கைக்கு வெளியே புலிகளின் உறுப்பினர்கள், ஆர்வமுள்ள தரப்பினர் இருக்கின்றனர். தலைவர்கள் அழிக்கப்பட்டபோதும் இன்னும் இயக்கம் முடிவுக்கு வந்துவிடவில்லை. இதற்கு இன்னும் சிலகாலம் எடுக்கும். இப்போது புலிகளிடமிருந்து மாத்திரம் அச்சுறுத்தல் இல்லை என்று இல்லை. ஜே.வி.பி., பொன்சேகா விடயங்களும் உள்ளன என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக