வியாழன், 7 ஜனவரி, 2010

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!!

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், செயலாளர் எஸ்.சதானந்தம், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் இன்றுகாலை 9மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து இன்றைய நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேகநபர்கள் என கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 12ஆயிரம் பேரில் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட பல சிறார்களும் இருப்பதால் அவர்களை மிகவும் குறுகியகால இடைவெளிக்குள் விடுதலை செய்யுமாறு மேற்படி தமிழ்க்கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டதுடன், இவர்களை தத்தமது பெற்றோரிடம் கையளித்தால் பெற்றோரே தமது பிள்ளைகளை புனருத்தாபனம் செய்து நல்லநிலைக்கு கொண்டுவருவார்கள் என்றும் வலியுறுத்தினர். அத்துடன் அண்மையில் தாம் வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள பெற்றோர்கள் பலர் இந்த சிறார்களை தம்மிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆகவே இவ்வாறு இந்த சிறார்களை பெற்றோரிடம் விடுவிப்பதன் மூலம், பெற்றோர் தமது குழந்தைகளை சரியானமுறையில் நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக ஆக்குவார்கள் எனறும் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து உடனடியாகவே ஜனாதிபதி அவர்கள், தனது செயலாளரிடமும், சிறுவர்களை புனருத்தாபனம் செய்யும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கும் இவர்களின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்ததுடன், வன்னியில் ஆரம்பமாகியுள்ள பாடசாலைகள் மற்றும் இந்தப் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான வசதிகள் அங்கு இருக்கின்றதா என்பது தொடர்பிலான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதேவேளை கிளிநொச்சி அரசாங்க அதிபர் வேதநாயகம் அவர்கள், மக்கள் மத்தியில் மிகவும் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் என்றும், ஒரு சிறந்த அதிகாரியான அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி உடனடியாகவே உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மக்களுடைய தேவைகள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மிகவும் விரிவாக ஜனாதிபதிக்கு மேற்படி தமிழ்க்கட்சித் தலைவர்கள் இதன்போது எடுத்துக் கூறினர். இவைகளை அவதானமாகக் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக