வியாழன், 7 ஜனவரி, 2010

ஜனாதிபதி ஒரு கோடிக்கு மேற்பட்ட செலவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு எஸ்.எம்.எஸ்., இணையம் என்பவற்றை பயன்படுத்துகிறார்..!!

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது தேர்தல் பிரசாரத்திற்கு இணையம் மற்றும் குறுந்தூர செய்திச் சேவையை (எஸ்.எம்.எஸ்.) பயன்படுத்துகிறார். எதிரணியின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவும் தனது இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளார். அவரும் கையடக்கத் தொலைபேசி மூலமான பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கூகிள் ஊடாக விளம்பரம் செய்வதை ஜனாதிபதி ராஜபக்ஷ ஆரம்பித்திருந்தார். சுலோகத்துடனான அவரின் படத்தை பல இணையத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. நீலநிறப் பின்னணியில் (கட்சி வர்ணம்) புகைப்படம் காணப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்போருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் எஸ்.எம்.எஸ். கிடைத்தது. “நான் உறுதியளித்ததன் பிரகாரம் சுதந்திரமான தேசத்தை நான் உங்களுக்கு தந்திருக்கிறேன். சகல வசதிகளிலும் உங்கள் எதிர்காலம் சிறப்படையும். புத்தாண்டு வாழ்த்துகள்! -மகிந்த ராஜபக்ஷ” என்ற வாசகங்கள் எஸ்.எம்.எஸ்.சில் அனுப்பப்பட்டிருந்தது. எஸ்.எம்.எஸ். ஒன்றின் செலவு இலங்கை நாணயத்தின் பிரகாரம் 1 ரூபாவாகும். 12.6 மில்லியன் பாவனையாளருக்குமான எஸ்.எம்.எஸ். செலவு 1,10,000 டொலர்கள் (ஏறக்குறைய ஒரு கோடியே 26இலட்சம் ரூபா) என்று கிரவுன்ட்வியூஸ் என்ற இணையத்தளம் தெரிவித்திருப்பதாக எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக