திங்கள், 28 டிசம்பர், 2009

தள்ளாடும் வயதில் தடுமாறும் கூட்டமைப்பு.- எம்.ஆர்.ஸ்ராலின்

எக்காரணத்திற்காக எக்காரியம் நடைபெறுகின்றதோ அக்காரணம் இல்லாமல் அக்காரியம் இல்லையென்பது முன்னோர் வாக்கு. புலிகளினால் புலிகளுக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் ஒற்றுமை வேசம் கலைந்துவிட்டது. அதன்படி கூட்டமைப்பின் ஆயுட்காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. புலிகள் தமது ஏக பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக்கொள்ளவும், மக்கள் மீது நிகழ்த்திவந்த அனைத்து அட்டூழியங்களுக்கும் அரசியல் நியாயம் கற்பிக்கவுமே இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர். அதன்படி பல்வேறு கட்சிகளில் இருந்தும் பல்வேறுபட்ட அரசியல் பின்னணிகளில் இருந்தும் பிரபாகரனின் காலடியில் சரணாகதி அடைந்த அரசியல் முதுகெலும்பற்றவர்களது இணைவிலேயே இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தூள்கடத்தல் மன்னர்களும் சொந்தக்கட்;சிக்குள் ஏற்பட்ட சொத்துப்பிரச்சனையில் வகிறிக்கொண்டு வெளியேறியவர்கள் சிலரும் தமது சுயபாதுகாப்புக்கருதி இந்தக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது வரலாறு. எப்படியோ புலிகள் தமது கள்ளவாக்கு பலத்தின்மூலம் இவர்களில் 22 பேரை எம்.பி.களாக்கி விட்டனர். அதனூடாக அவர்களது ராஜதந்திர அந்தஸ்துக்களை புலிகள் தமது பணம் சேர்க்கும் கீழ்த்தரமான நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்தினர். வெளிநாட்டுத் தமிழரிடம் கப்பம் வாங்கும் பிரச்சார செயற்பாடுகளில் பங்குபற்றுதலே இந்தக் கூட்டமைப்பு எம்.பி.களின் கடந்தகால செயற்பாடுகளின் முக்கியமானதொன்றாய் இருந்துவந்துள்ளது.
புலிகளது நிகழ்சிநிரலின்படி உருவாக்கப்பட்ட இவர்கள் புலிகளினாலேயே கட்டி மேய்க்கப்பட்டனர். அதற்கப்பால் இந்த 22 பேரிடமும் ஒருமித்த அரசியல் கொள்கைகளோ கோட்பாடுகளோ எந்தவித மண்ணாங்கட்டியும் இருக்கவில்லை. எனவேதான் மு.பி. காலத்தில் இருந்து இவர்கள் தடம்புரளத் தொடங்கியுள்ளனர். புலிகளது அழிவுடன் இந்த கூட்டமைப்பினரின் போலி ஒற்றுமையும் கலையத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முனைபவர்கள் தமக்குரிய வழிகாட்டியின்றி தத்தளிக்கும் அவலம் தொடர்கிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுக்க இவர்களால் முடியவில்லை. தனித்துப் போட்டியிடுவது என்ற தமது முடிவினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையில் சிவாஜிலிங்கம் அந்த கூட்டை விட்டு பிய்த்துக்கொண்டு வெளியேறிவிட்டார். அவரை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லும் கூட்டமைப்பினர் அப்படியானால் யாரை ஆதரிப்பது என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு பதிலிறுக்க முடியாத நிலையில் உள்ளனர். 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட சம்பந்தர் கூட இருதலைக்கொள்ளி எறும்பாக நெளிகின்றார். அவரது தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணி பாரம்பரியம் அவரை ஏகாதிபத்திய விசுவாசம் கொண்ட சரத்பொன்சேகா பக்கம் இழுத்தாலும் "தமிழ் மக்களைக் கொன்றொழித்த இலங்கை இராணுவம்" என்று தங்களால் குற்றம் சாட்டப்படும் படையினரை வழிநடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களியுங்கள் என்று கேட்க அவர்களுக்கு வக்கில்லை. ஜனாதிபதி ராஜபக்சவை ஆதரிப்பதைவிட வேறு வழியில்லை என்று கட்சிக்குள் முணுமுணுக்கும் சகபாடிகளிடம் சம்பந்தரின் சுட்டெரிக்கும் பார்வை விழுவதாகக் கேள்வி.
இந்த நிலையில் கூட்டணி எம்.பி. கள் சிலர் ராஜபக்சவை ஆதரிப்பதாகவும் அதற்கு கைமாறாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது பாராளுமன்ற ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் கிழக்குமாகாண முக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் நடையாய் நடப்பதாய்க் கேள்வி. பொங்குதமிழ் மக்கள் படையென்று தினாவெட்டுப் பேசிய சிலருக்கு முள்ளிவாய்க்காலுக்கு பின் நாவடங்கி விட்டது. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 23 வேட்பாளர்களிலும் யார் யாரை ஆதரிப்பது என்பதை ஏறக்குறைய எல்லாக்கட்சிகளும் முடிவெடுத்து அறிவித்து விட்ட நிலையில் பிரச்சார வேலைகளும் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை பீற்றிக்கொள்ளும் இந்தக் கூட்மைப்பினருக்குள் ஆயிரம் குத்துவெட்டுக்களும், இழுபறிகளும் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டவும், தலைமையேற்கவும் இவர்களுக்கு என்ன தகுதி உண்டு என்ற கேள்வியை வடக்கு, கிழக்கு மக்கள் முன் பலமாக எழுந்துநிற்கிறது.nan
எம்.ஆர்.ஸ்ராலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக