யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 பாதையூடாக பயணம் மேற்கொள்ளும் போது மக்களின் வாகனங்கள் நாளை தொடக்கம் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவையில்லையென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணி யின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப்பினர்களுடன் நேற்றுமாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து கொழும்பு வந்த வர்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ இனிமேல் மேற்கொள்ளாமல் மீண்டும் அங்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதிபெறும் நடைமுறை கடந்தமாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொண்டு வருவது தெரிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக