வியாழன், 17 செப்டம்பர், 2009

வவுனியா குருமண்காடு பகுதியில் 18 வயது கர்ப்பணிப்பெண் கோரமாக வெட்டிப் படுகொலை, கணவர் கைது!

வவுனியா குருமண்காடு பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையமொன்றுக்குள் 18வயது நிரம்பிய கர்ப்பிணி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருமணம் முடித்து ஆறு மாதங்களேயான குறித்த பெண் சுஜி என்ற பெயருடையவராவார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது கணவரான 43வயதுடைய ஸ்ரெனிஸ்லாஸ் பாஸையா என்பவரால் கூரிய வாளொன்றினால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து கொலையாளியான கணவர் தலைமறைவாகியிருந்தார். அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் வவுனியா பொலீசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து வவுனியா பொலீசார் மாவட்ட நீதிவானுடன் ஸ்தலத்திற்கு விரைந்து மூடப்பட்டிருந்த கடையினை உடைத்து சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நீதவானின் உத்தரவின்பேரில் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த பெண்ணின் சடலத்தில் கண்கள் இரண்டும் அகற்றப்பட்டும், கால்களில் கூரிய ஆயுதங்களால் ஓட்டை துளைக்கப்பட்டும் இருந்தநிலையில் சடலம் உரைப்பையினுள் போடப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் குறித்த கொலையாளி அப்பகுதியில் நடமாடிய போது அவரை புளொட் அமைப்பைச் சேர்ந்த மயூரன் என்பவர் துரத்திப் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது கொலையாளி வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
(நன்றி அதிரடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக