வெள்ளி, 5 ஜூன், 2015

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் சுற்றாடல் தின பரிசளிப்பும்; பல் ஊடக எறியீ கையளிப்பும்.!(படங்கள் இணைப்பு)

இன்று உலக சுற்றாடல் தினமாகும். இதனை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் திருமதி சி.கந்தசாமி அவர்களின் தலைமையில் இன்று சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மூலிகைக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலையில் பல்வகையான மூலிகை செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வகை மூலிகைச் செடிகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து சுற்றாடல் நிகழ்வுகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்காக சுற்றாடல் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

இங்கு திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,

நாம் எமது சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். இன்றைக்கு வடபகுதியைப் பொறுத்தமட்டில் சுற்றாடல் மிகவும் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயனப் பொருட்களினால் தண்ணீரும், விவசாய நிலங்களும் மாசடைகின்றது. எனவே இதனை நாம் ஒரு முக்கிய விடயமாகக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனால் மக்களின் சுகாதாரம்  பாரியளவில் பாதிக்கப்படுகின்றது. மேலும்; பொலித்தீன் பாவனையும் நிலத்தினையும் நீரையும் பெருமளவில் மாசடையச் செய்கின்றது. 

இந்தப் பாடசாலையைப் பொறுத்தமட்டில் சுற்றாடலைப் பாதுகாப்பதில் இந்த மாணவர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் கவனம் செலுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது. இந்த மாணவர்கள் சுத்தமாகவும், மிக அழகாகவும் தங்களுடைய பாடசாலை சுற்றாடலை வைத்திருக்கின்றார்கள். அத்துடன் பல்வகையான மூலிகைச் செடிகளை வளர்த்து அடிப்படையிலேயே மூலிகைகளின் பயன்பாடு பற்றி தெரிந்துகொள்ளச் செய்துள்ளதுடன், சுகாதாரம் மற்றும் சுற்றாடல் குறித்த ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கின்றார்கள். 

இதற்காக அதிபர் மற்றும் ஆசிரியர்களை நாம் பாராட்ட வேண்டும். இதுபோல் இந்தப் பகுதிகளிலே இருக்கக்கூடிய அனைத்துப் பாடசாலைகளும் இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவதன் மூலம் பிள்ளைகளின் சுற்றாடல் மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிவினை வளர்க்க முடியும் என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய வட மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பல் ஊடக றியீ
 (Multi Media Projector) பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக