புதன், 27 மே, 2015

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் அதிரடி நியமனம்.!.


யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார்.

அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான கொடுமையான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும், நீதிபதி இளஞ்செழியன் கடமையாற்றியிருந்தார்.
அதனையடுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
திருகோணமலையில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய அவர், பின்னர் கல்முனைக்கு மாவட்ட நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றிருந்தார்.
கல்முனை மாவட்ட நீதிபதியாக 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய பின்னர், 2012 ஆம் ஆண்டு அவர் மீண்டும் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டு அங்கு 2014 ஆம் ஆண்டு வரை மேல் நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றினார்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத:;து, அவர் தற்போது அங்கு கடமையாற்றி வருகின்றார். இப்போது பிரதம நீதியரசர் அவரை எதிர்வரும் 01.06..2015 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்திருக்கின்றார்.
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக