ஞாயிறு, 31 மே, 2015

சுவிசில் இன்றையதினம், "அமரர் சிறீ சபாரட்ணம் உட்பட ரெலோ போராளிகளின் நினைவுதினம்" அனுஷ்டிப்பு & புங்குடுதீவு வித்தியாவுக்கும் அஞ்சலி..!!(படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சர்வதேச செயலகத்தினால் சுவிஸ்லாந்தின் சொலத்தூண் மாவட்டத்தில் ரெலோ செயலாளர் நாயகம் அமரர் சிறீ சபாரட்ணம் அவர்கள் உட்பட உயிர்நீத்த ரெலோ இயக்கப் பேராளிகளின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (30.05.2015) அனுஷ்டிக்கப்பட்டது.  

இதன்போது உயர் நீத்தவர்களுக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி மற்றும் மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.

ரெலோ தோழர் திரு.சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ரெலோ தோழர் திரு.செல்வா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இதன்போது திரு.துளசீஸ்வர சர்மா, ரெலோ தோழர் ஞானம், வைத்தியர் திரு. ரூபன், மூத்த ஊடகவியலாளர் திரு. சண் தவராஜா மற்றும் திரு.சுவிஸ் ரஞ்சன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

முதலில் உரையாற்றிய திரு.துளசீஸ்வர சர்மா அவர்கள் உரையாற்றும் போது, " இறந்தவர்களை நினை கூர்வது தவிர்க்க முடியாதது எனவும், அவர்களின் நினைவு கூறலானது, அவர்கள் விட்டுச் சென்ற இலட்சியத்தை முன்னெடுப்பதே" எனவும் குறிப்பிட்டார்.

ரெலோ தோழர் ஞானம் அவர்கள், "ஸ்ரீ அண்ணாவுடன் வாழ்ந்த காலத்தை நினைவு கூர்ந்து" ஒரு பகிர்வை பதிவிட்டார்.

வைத்தியர் திரு. ரூபன் அவர்கள் இங்கு உரையாற்றுகையில், "தமிழ் மக்களாகிய நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் எமது பலமாகும்" என்று கூறி தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினார். 

தொடர்ந்து உரையாற்றிய மூத்த ஊடகவியலாளர் திரு. சண் தவராஜா அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம், அதற்குப் பங்களித்தவர்களின் விபரங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு மற்றும் செயற்பாடுகள் என பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "இங்கு புங்குடுதீவில் உயிரிழந்த மாணவி வித்தியாவின் புகைப்படமும் காணப்படுகின்றது. அவருக்கும் இங்கு நான் அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏனெனில் சுவிஸ் ரஞ்சன் அவர்களும் இங்கு இருப்பதனால் அவ்விடயத்தை இதில் சுட்டிக்காட்டுவது எனக்கு ஒரு முக்கியமெனப் படுகின்றது".

"ரஞ்சன் அவர்களது புகைப்படங்களை சில விசமிகள் வேண்டுமென்றே முகநூல்களில் பரவவிட்டமை தொடர்பாக நான் சிலரிடம் முரண்பட்டேன். இதன்போது அவர்கள் "நீங்கள் ஏன் அவருக்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்?" என்று என்னிடம் வினவினார்கள்". 

"இதற்கு "அவருக்காக நான் வக்காளத்து வாங்கவில்லை. உண்மையைத் தான் சொல்லுகின்றேன்" என்றேன். "அவர் இங்கு இருக்கும்போது அவர் குறித்து தேவையில்லாமல் ஏன் இவ்வாறு அப்பட்டமான பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறீர்கள்?" என்று நான் கேட்டபோது என்னுடன் அவர்கள் முரண்பட்டார்கள். இதன்மூலம் அவர்களுடைய கருத்துக்களும் அவர்களது செயல்களும் முற்றுமுழுதாக பிழையானதாகவே இருந்தது" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய சுவிஸ் ரஞ்சன் அவர்கள், 

"ரெலோ இயக்க செயலாளர் நாயகம் அமரர் சிறீ சபாரட்ணம் அவர்கள் உட்பட உயிர்நீத்த அனைத்து ரெலோ இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் அஞ்சலிகளைச் செலுத்துவதோடு, சகோதரி செல்வி வித்தியா சிவலோகநாதன் அவர்களின் புகைப்படமும் இங்கு வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுவதையிட்டு நான் மிகுந்த மனதிருப்தி  கொள்கின்றேன்".  

"அதேநேரம் செல்வி வித்தியாவின் படுகொலை; எவராலும், எந்த ஒரு மனிதப் பிறப்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு படுபாதக செயல் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் கடந்த பதினான்கு தினங்களில் அங்கு பெண்கள் மீதான பத்து வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளதாக நாம் அறிகின்றோம்". 

"புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்து புங்குடுதீவு மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தொடர்ந்து அனைத்து பிரதேச மாணவர்களினாலும், பொதுமக்களாலும், பல்வேறு அமைப்புக்களினாலும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் அளவுக்கு எழுச்சி பெற்றுள்ளது". 

"அதேபோன்று ஏனைய பிரதேசங்களில் நடக்கின்ற படுபாதகச் செயல்கள் தொடர்பில்; அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இப்படியான செயல்களுக்கெதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு முன்னெடுப்பதன் மூலமே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென்பதுடன், இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கான ஏதுவாகவும் அது அமையும்".

"அதற்காக நான் புங்குடுதீவு மக்கள் தான், உரிமைக்காக பாடுபட்டார்கள் என்று இங்கு கூற வரவில்லை. ஆனால் புங்குடுதீவு மக்களைப் போன்று ஏனைய கிராமத்தவர்களும் தாம் பாதிக்கப்படும் போது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் இந்த போராட்டமானது நாலா திசையிலும் வலுவடைந்து இது போன்றதொரு படுபாதகச் செயல் எங்குமே நடைபெறாதிருக்க வழிசெய்யும் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்". 

"அதேவேளை இங்கு திரு. சண் தவராஜா அவர்கள் நான் குறித்து சில விடயங்களைக் கூறியிருந்தார். அதாவது எனக்காக வக்காளத்து வாங்கப்போய் தான் முரண்பட்டுக் கொண்ட விடயத்தைக் கூறியிருந்தார். அவர் மாத்திரமல்ல அவர் போன்று எனது நண்பர்கள் பலரும் அவரைப்போல் எனக்காக வாதாடியிருந்தார்கள். எனக்காக பல்வேறு முரண்பாடுகளையும் சந்தித்துள்ளார்கள். இருந்தபோதிலும் இது ஒரு திட்டமிட்ட விசமச் செயல் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்". 

"அங்கு சிறையில் இருக்கும் சுவிஸ்குமார் நான் அல்ல என்று தெரிந்தும்கூட என்மீது சேறுபூச வேண்டுமென்றே திட்டமிட்டு சிலரால் முன்னெடுக்கப்பட்ட விடயமே நடந்தேறியுள்ளது. ஆனால் நான் அதுகுறித்து கலங்கியதில்லை, அஞ்சியதுமில்லை. இருப்பினும் எனக்காக இந்த விடயத்தில் முன்நின்று வாதாடி முரண்பட்டு விடயத்தைத் தெளிவுபடுத்தியவர்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்".

"அதேநேரம் நான் இந்த அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றுவதுடன் நின்றுவிடாது, இந்த அஞ்சலி நிகழ்வில் நான் விடுக்கும் கோரிக்கை யாதெனில், அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தம்மிடையே உள்ள சிறுசிறு முரண்பாடுகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையாக அதாவது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கிய ஒரு விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே எமது மக்களுக்கான விடிவையும் அவர்களுக்கான நல்வாழ்வையும் பெற்றுத்தர முடியுமென்று கூறிக்கொள்கின்றேன்" என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பல பிரமுகர்களின் அஞ்சலி உரைகளும் இடம்பெற்று நிகழ்வு நிறைவடைந்தது. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக