திங்கள், 6 அக்டோபர், 2014

வடமாகாணசபை உறுப்பினரும் வடமாகாண கல்விக்குழு உறுப்பினருமான பா.கஜதீபன் அவர்களின் ஆசிரியர்தின வாழ்த்துச்செய்தி!!


‘நாட்டின் எதிர்காலம் பாடசாலை வகுப்பறைகளிலேயே உருவாகின்றது’ என்பது அறிஞர் கருத்தாகும். ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது.

அன்று தொட்டு இன்றுவரை எமது ஆசிரியர்கள் காலத்துக்காலம் பல்வேறு நெருக்கடிகளைச்சந்தித்து
வந்திருப்பினும் எமது இனம் சார்ந்த மொழி சார்ந்த தமிழ்த்தேசிய உணர்வுகளை எமது சந்ததியினரிடையே கடத்தி வந்த வண்ணமே இருக்கின்றார்கள் என்பதனால் தான் இன்றுவரை நாம் தலை நிமிர்ந்து நிற்க வல்லவர்களான நிலையிலிருக்கின்றோம் என்பதை நானும் ஒரு ஆசிரியனாகப்பெருமையோடு நினைவு கூருகின்றேன்.

ஆசிரியப்பணி என்பது வெறுமனே கல்வியை மட்டுமல்ல நல்லொழுக்கத்தையும் சிறந்த பண்பையும்,பொது அறிவையும் சமூக சிந்தனைகளையும் மாணவ சமூகத்துக்கு கற்பிக்கும் பாரிய சமூகப்பொறுப்பு மிக்க சேவையாகும்

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்த லாபநோக்கமும் இன்றி பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் உலகை விரியச் செய்து உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியர்கள் பெருளவில் இருந்து சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும்.

பிற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால் வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை இருக்கவும் முடியாது.

அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகமாகும்.
இதன்படியே எமது ஆசிரியர்களும் இன்றுபல தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி எமது இனத்துக்கான சேவைகளைத்திறம்பட ஆற்றிவருகின்றனர். தம் குடும்பங்களைக்கூடப்பிரிந்திருந்து மாணவர் நலன்கருதி அடிப்படை வசதியற்ற பிரதேசங்களிலும் அறிவொளியைப்பரப்பும் உன்னதமான பணியாறிவருகின்றனர்.

ஒரு ஆசிரியனாக ஆசிரியர்களின் தேவையை அறிந்துள்ளதுடன் அமைந்துள்ள எமது மாகாண அரசின் மூலம் எமது ஆசிரியர்களின் சிரமங்களை நீக்கி இலகுவாகப்பணிபுரியும் சூழலை ஏற்படுத்த முயற்சி செய்து ஒருசில தீர்வுகளையும் வழங்கியுள்ளதுடன் மேலும் பல தீர்வுகளைப்பெற முயற்சி எடுத்து வருகின்றோம். நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் சிற்பிகளான என் சக ஆசிரியர்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக