சனி, 20 செப்டம்பர், 2014

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மோடி அரசு வலியுறுத்தும்...!!!!

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டு அரசை வலியுறுத்தும் என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் செப்டம்பர் 18 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க பாஜக சார்பில் முரளிதர ராவும், அக்கட்சியின் வெளியுறவுப் பிரிவு அமைப்பாளர் விஜய் ஜாலியும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையொட்டி கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை முரளிதர ராவ் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்திய பிரதமராக பொறுப்பேற்றவுடனேயே தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இலங்கையின் அரசியல் சாசன கட்டமைப்புக்கு உள்பட்ட சமவுரிமை, மதிப்பு, நீதி, சுய மரியாதை ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.


இதை இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், எங்கள் இலங்கைப் பயணத்தை பயன்படுத்தி வருகிறோம்.

கொழும்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸையும் இதே நோக்குடன்தான் நாங்கள் சந்தித்துப் பேசினோம்.

இதைத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

இலங்கையில் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்றார் முரளிதர ராவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக