புதன், 30 ஜூலை, 2014

நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சிந்திப்பது எமது இன்றைய முக்கிய கடமை: பா.உறுப்பினர் சி.சிறீதரன்!!


யாழ் பாலர் பாடசாலைகளின் விளையாட்டு விழா 2014 யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியை யாழ் பாலர் கல்விக்கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள ஞானக்குழந்தைகள் இல்லம், நாவலர் பாலர் சோலை ஆகியன இணைந்து நடாத்தின.

ஆசிரியர் ஜெ.சியாமளா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம
விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும், சிறப்பு விருந்தினராக பாலர் கல்விக்கழகத்தின் தலைவரும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியருமான எஸ்.பி.காசிநாதரும், கௌரவ விருந்தினராக பாலர் கல்விக்கழகத்தின் செயலாளர் தேனா.இராஜகோபாலும் கலந்துகொண்டு சிறுவர்களின் விளையாட்டு நிகழ்விற்கு மதிப்பளித்தனர்.

இந்த நிகழ்வில் சிறார்களுக்கு பரிசில்களையும், வெற்றிக்கிண்ணங்களை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மதிப்பளித்தார். இதன்போது அவர் உரையாற்றுகையில்,

இந்த சிறார்களின் நிகழ்வில் நானும் பங்குகொள்ள கிடைத்த வாய்ப்புக்கு நான் முதலில் நன்றி சொல்கின்றேன். இது எமது மண்ணின் எதிர்கால சிற்பிகளின் களம் என்பதால் இது முக்கியமானது. இங்கு சிறார்களின் பல்வேறுபட்ட திறமைகளை பார்க்கக்கிடைத்தது. அவர்களுக்குள் உள்ளிருக்கும் உணர்வுகளையும் அறியக்கிடைத்தது. ஆதலால் நாம் இந்த பிள்ளைகளை சிறந்த முறையில் எதிர்காலத்துக்கு வழிகாட்டும் கடமையை கொண்டிருக்கின்றோம். அதிலும் அவர்கள் எமது வரலாறுகளை அறிந்தவர்களாக எமது தமிழினம், தமிழன், தமிழ் என்ற பற்றுடையவர்களாக வளர்க்கப்பட வேண்டியது எம் எல்லோரதும் கடமை. இங்கு பாரதியாக வேடம் பூண்டு அச்சமில்லை அச்சமில்லை என்று கூறியதுபோல அச்சமற்ற ஒரு வாழ்வை நோக்கி இவர்கள் வளர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக